Tamilnadu

பட்டாசுகளை ரயிலில் கொண்டுச் சென்றால் 3 ஆண்டு சிறை - ரயில்வே போலிஸார் எச்சரிக்கை

தீ விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளோ, வெடி பொருட்களோ ரயில் கொண்டு செல்லக்கூடாது என்றும் மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ரயில்வே போலிஸார் எச்சரித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு போலிஸாரின் கலைக் குழுவினர் பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்

ரயிலில் வெடி பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரயில் நிலைய வளாகத்திற்குள் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என துண்டு பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், விதியை மீறி ரயிலிலோ, ரயில் நிலைய வளாகத்திலோ தீ விபத்தை ஏற்படுத்தக் கூடிய பட்டாசு மற்றும் வெடி பொருட்களை கொண்டுச் சென்றால் ரயில்வே பாதுகாப்புச் சட்டப் பிரிவு 164-இன் கீழ், 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றும் தஞ்சை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சந்திர சேகரன் தெரிவித்தார்.

இது போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.