Tamilnadu
“அமைச்சரவையில் தொடரும் தகுதியை இழந்துவிட்டார் ராஜேந்திரபாலாஜி”: அமைச்சருக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்!
நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் களக்காடு பகுதியில் கேசவநேரி என்ற ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் கடை கோரிக்கைக்காக சென்றுள்ளனர்.
அப்போது பொதுமக்களுடன் சென்ற முஸ்லிம் மக்களைப் பார்த்து, “மோடியுடன் நாங்கள் இருப்பதால், நீங்களும், கிறித்தவர்களும் எங்களுக்கு ஓட்டுப் போடமாட்டீர்கள். உங்களுக்கு எதற்கு நாங்க செய்யணும்?” என கேட்டிருக்கிறார். அதோடு மட்டுமின்றி, “காஷ்மீர் போல உங்களை ஒதுக்கி வைக்கணும்” என்று அவர்களது மனம் புண்படும்படி பேசியுள்ளார்.
இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரத்திற்கு சென்றுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கேசவனேரி என்ற பகுதியில் தன்னிடம் மனு கொடுக்க வந்த மக்களிடம் அவர்களின் மதத்தைக் குறிப்பிட்டு, மனம் நோகும் விதமாக பேசியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அந்தச் செய்தியில், காஷ்மீரில் செய்திருப்பதைப் போல, தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களை ஒடுக்குவோம் என்றும் அவர் பேசியதாக குறிப்பிட்டுள்ளனர். அரசமைப்பு சட்டத்தின் பேரில் உறுதியெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள், அனைவருக்குமாக செயல்பட வேண்டும்.
முஸ்லிம் - இந்து என குடிமக்களை பிரித்துப் பேசுவது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, உள்நோக்கமுடையதும் ஆகும். மேற்சொன்ன செய்தி உண்மையென்றால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சரவையில் தொடர தகுதி இழந்துவிட்டார். தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அமைச்சர் மீது விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!