Tamilnadu
எடப்பாடி பழனிசாமிக்கும், புதுச்சேரி நாராயணசாமிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? - மு.க ஸ்டாலின் ’பளீர்’ !
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இந்தத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் இன்று காலை புதுச்சேரி சென்றார்.
வழுதாவூர் சாலையில் உள்ள அக்கார்ட் ஓட்டலில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், வைத்திலிங்கம் எம்.பி., காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், தி.மு.க. அமைப்பாளர்கள் ஆர்.சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.திருநாவுக்கரசு, உள்ளிட்ட தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி தலைவர்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று மாலை காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட தென்றல் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், சாமிப்பிள்ளைத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் ஆரவாரமாக பூ தூவி வரவேற்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் வெள்ளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது-
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கத்தை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த புதுச்சேரி மாநில மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி- தமிழகத்தில் 39 இடங்களில் மகத்தான வெற்றியை பெற்றோம்.
வருகிற 21ந் தேதி நடக்கிற காமராஜர் நகர் தொகுதியில் நடக்கக்கூடிய இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக ஜான்குமார் உங்களிடம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஜான்குமார் ஏற்கனவே நெல்லித்தோப்பு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் தனது பதவியை முதல்வர் நாராயணசாமிக்காக தியாகம் செய்தவர். முதல்வர் நாராயணசாமிக்காக கரம் கொடுத்த அவருக்கு காமராஜர் நகர் தொகுதி மக்கள் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
கவர்னர் பதவி என்பதே தேவையில்லாத பதவி. அன்றே அண்ணா சொன்னார். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவை இல்லை என்றார். எங்கெங்கு பி.ஜே.பி ஆட்சி இல்லையோ அங்கெல்லாம் கவர்னரை வைத்து அரசியல் செய்கிறது அந்த கட்சி. புதுச்சேரியில் கிரண்பேடி சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார்.
சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கவர்னர் உரையாற்றிவிட்டு செல்ல வேண்டும். வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் இருந்து வரும் விருந்தினர்களை வரவேற்க வேண்டும். ஆனால், இங்கு கிரண்பேடி வந்து உட்கார்ந்து கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்கும் விதமாக, மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் விதமாக நடந்து கொள்கிறார். இலவச அரிசி, இலவச வேட்டை சேலை ஆகியவை மக்களுக்கு கிடைக்க கிரண்பேடி தடையாக இருக்கிறார். முதலமைச்சர் அறிவித்துக் கொண்டிருக்கும் நலத்திட்டங்களை தடுத்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர் கிரண்பேடி.
புதுவை மாநிலத்தில் புரட்சிகரமான முதல்வர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அதாவது மத்திய அரசு ஆட்சி செய்து செய்துகொண்டிருக்கிறது.
தமிழக முதல்வர் சாதாரண முதல்வர் அல்ல. அடிமை முதல்வர். கைக்கட்டி வாய் பொத்தி அடிமை ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் இருப்பது அடிமை ஆட்சி. எடுபிடி ஆட்சி. மாநில உரிமை பறிக்கப்பட்டாலும் தட்டி கேட்பதில்லை. தமிழக ஆளுநர் செய்யும் அராஜகத்தை தட்டி கேட்கும் தைரியமில்லை. ஆனால் முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து போராடுகிறார்.
ஒரு மாநில முதல்வர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
இவற்றை சிந்தித்து பார்த்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெறும் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்.
எதிர்க்கட்சி கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. முன்னாள் முதல்வர், என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி ஒரு துரோகி. இதை நான் சொல்லவில்லை அதிமுக அம்மையார் ஜெயலலிதா சொல்லியதுதான். புதுச்சேரி மாநிலத்தை படுகுழிக்கு தள்ளியவர் ரங்கசாமி என்று ஜெயலலிதாவே சொல்லிவிட்டார்.
சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், சமூக சூழல் போன்றவற்றில் தொடர்ந்து புதுச்சேரி மாநிலம் முதலிடம் பெற்று பரிசுகளையும், பாராட்டையும் பெற்றுள்ளது. கிரண்பேடியின் போடும் முட்டுக்கட்டைகளையும் தாண்டி, பல்வேறு சாதனைகளை நாராயணசாமி அரசு செய்துள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நூறு யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மின்சாரம் இலவசம் என மக்கள் திட்டங்களை அவர் நிறைவேற்றி வருகிறார்.
நாராயணசாமிக்கு நீங்கள் கரம் கொடுக்க வேண்டும் என்றால் ஜான்குமாருக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள். இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் இப்போது பாராளுமன்ற உறுப்பினராகி விட்டார். அவர் விட்டுச் சென்ற பணிகளை ஜான்குமார் தொடர்வதற்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள்.”
இவ்வாறு தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். முன்னதாக புதுச்சேரி மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயரை ஆயர் இல்லத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!