Tamilnadu

70% மருத்துவ இடங்களைக் கைப்பற்றிய பழைய மாணவர்கள்... நீட் பயிற்சி மையங்களால் புதிய மாணவர்களுக்கு சிக்கல்!

நீட் தேர்வில் முறைகேடு, நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறை சோதனை என்று தினம் தினம் பல்வேறு செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நீட் தேர்வின் மூலம் மருத்துவம் படிக்கும் நடப்பாண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது குறித்து ஆர்‌டி‌ஐ தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வின் மூலம் மருத்துவப்படிப்பு படிப்போரில் கடந்த ஆண்டுகளில் +2 முடித்த மாணவர்களின் எண்ணிக்கை 12 சதவீதமாக இருந்தது. தற்போது நடைபெற்று முடிந்த மருத்துவக் கலந்தாய்வில் பழைய மாணவர்களின் எண்ணிக்கை 70 சதவீதமாக உயர்ந்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல் அடிப்படையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 2019ம் ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு மூலம் 4,202 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களில் 2,916 பேர் முந்தைய ஆண்டுகளில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ இடம் கிடைக்காதவர்கள். 2010ம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடிந்த 2 பேர் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்.

2,371 மாணவர்கள் கடந்த ஆண்டு பள்ளி படிப்பை முடித்தவர்கள். 491 பேர் 2017ம் ஆண்டும், 35 பேர் 2016ம் ஆண்டும், 6 பேர் 2015 பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாநில பாடத்திட்டம் படித்து மருத்துவ இடம்பெற்ற 2,762 மாணவர்களில் 2,402 மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் மருத்துவ இடம் கிடைக்காதவர்கள். சி‌பி‌எஸ்‌சி பாடத்திட்டத்தில் படித்து மருத்துவ இடம் பெற்ற 1,368 மாணவர்களில் 482 மாணவர்கள் கடந்த ஆண்டுகளில் மருத்துவ இடம் கிடைக்காதவர்கள். 2016ம் ஆண்டு மாநில அரசின் கீழ் நடந்த மருத்துவ கலந்தாய்வில் பழைய மாணவர்கள் 450 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

நீட் பயிற்சி மையங்கள் அதிக அளவில் பரவிக்கிடக்கும் நிலையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் அந்த பயிற்சி மையங்களை நோக்கித்தான் செல்கிறார்கள். இதன் காரணமாகவே மருத்துவ இடம் கிடைக்காத முந்தைய ஆண்டு மாணவர்கள் புதிய மாணவர்களை விட அதிக அளவில் தொடர்ந்து இடம்பெறுவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

- சி.ஜீவா பாரதி