Tamilnadu

4250 மருத்துவ மாணவர்களின் சேர்க்கை மறுஆய்வு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி வேல்முருகன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 4250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், 4250 மாணவர்களின் சேர்க்கையை மறுஆய்வு செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மாணவர்களின் ஆடை, தலைமுடி, கழுத்து வரை சோதனை செய்த அதிகாரிகள், முகத்தை சோதனை செய்யாமல் விட்டுவிட்டார்கள். கைரேகை மட்டுமல்லாமல் முகத்தை பதிவு செய்யும் வகையில் கருவிகள் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கும் மாணவர்களை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியிடக் கூடாது எனவும், எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான இடங்களில் ஆள் மாறாட்டம் செய்து மாணவர் சேர்க்கை பெற்றிருந்தால் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிற மாநில தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதியிருப்பதால், ஏன் நீட் ஆள்மாறாட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கக்கூடாது எனவும், இதுகுறித்து பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், இவ்வழக்கில் சி.பி.ஐ.யை நீதிபதிகள் எதிர்மனுதாரராக சேர்த்தனர். மேலும், நீட் ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

எதிர்காலத்தில் நியாயமான முறையில் நீட் தேர்வு நடத்த எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.