Tamilnadu

உச்சகட்ட பாதுகாப்பில் உள்ள சென்னையில் வெடிகுண்டு வீச்சு: பெண் வழக்கறிஞரைக் கொல்ல மர்ம கும்பல் முயற்சி!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் தோட்டம் சேகர். இவருடைய மனைவி வழக்கறிஞர் மலர். இவர் திருவல்லிக்கேணி அ.தி.மு.க இணை செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், மலரும் அவரது மகன் அழகுராஜும் இருசக்கர வாகனத்தில் சென்னை ரிச்சி தெரு அருகே உள்ள டேம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் மீது மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசி கொலை முயற்சி செய்துள்ளனர்.

முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ராயப்பேட்டை போலிஸாரை தாக்கிய வழக்கில் என்கவுண்டரில் ஆனந்த சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனந்தை அழகுராஜ் தான் போலிஸில் காட்டிக்கொடுத்தார் என ஆனந்தின் கூட்டாளிகள் அழகுராஜை பழிதீர்க்க காத்திருந்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் தோட்டம் சேகரின் மனைவி மலர் மற்றும் மகன் அழகுராஜ் என இருவரின் மீதும் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற போது அழகுராஜை அரிவாள் வெட்டு விழுந்தது.

இந்த தாக்குதலில் தாய் மகன் இருவரும் கடுமையாக காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அழகுராஜ் பாதுகாப்பு கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தாக்குதல் நடத்திய கும்பலை போலிஸார் தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சீன அதிபர் - பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் காவல் துறை தீவிரமாக இருப்பதால், இது தான் சரியான நேரம் என ரவுடிகள் வன்முறையில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.