Tamilnadu
“போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்க முயற்சிக்க வேண்டாம்” : கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!
எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், காற்று மாசுபாடு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் மின்வாகனப் பயன்பாட்டை கொண்டுவர படிப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் மின்சார பேருந்து சேவைக்கான சோதனை ஓட்டத்தை அண்மையில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆனால் இந்த பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 525 மின்சாரப் பேருந்துகளை இயக்கப்போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மின்சாரப் பேருந்துகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த உயர் தொழில்நுட்பங்கள் வரவேற்கத்தக்கது.
ஆனால், மாநில அரசு இந்தப் பேருந்துகளை தனியாரிடம் இருந்து வாடகைக்குப் பெறுவதாகவும், ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பப் பணிகளை தனியாரே பார்த்துக் கொள்வர் என்றும், நடத்துநர் மட்டுமே போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் அறிவித்துள்ளது.
இது தனியார்மயத்திற்கான கால்கோள் விழாதான் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது. அ.தி.மு.க அரசு போக்குவரத்துத்துறையை பொதுத்துறையாக நீடிக்கும் முடிவைக் கைவிட்டதையே குறிக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களின் தொழிலுக்கும், பொருளாதாரச் செயல்பாட்டுக்கும் பேருதவியாக இருக்கிற போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கும் எந்த முயற்சியையும் மாநில அரசு எடுக்கக் கூடாது. மின்சாரப் பேருந்துகளை மாநில அரசே இயக்கவேண்டும். தொழிலாளர் வேலைவாய்ப்புகளைப் பறிக்கக் கூடாது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!