Tamilnadu

வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரை என விற்ற மோசடி கும்பல் : பெண் உட்பட 4 பேர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பல இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, போதை ஊசி பயன்படுத்தி வருவதாகத் தகவல் வெளியானது. அதனையடுத்து அறந்தாங்கி போலிஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வலி நிவாரணியாகப் பயன்படுத்தும் டைடால் 100 என்ற பெயின் கில்லர் மாத்திரையை இளைஞர்கள் பொடியாக்கி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

அந்த வலி நிவாரணி மாத்திரையை சைலான் திரவத்தில் கலந்து அந்த நீரை வடிகட்டி, ஊசியின் மூலம் தங்களில் உடலில் செலுத்தி வந்துள்ளார்கள். அதன் மூலம் அந்த இளைஞர்கள் சுமார் 8 மணி நேரம் வரை போதையில் மயக்கத்துடன் இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து இளைஞர்களுக்கு போதை மாத்திரையை விற்று வந்த பெண் உட்பட 4 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். இதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வினோஜெகன் மற்றும் அவரது மனைவி மானுமதி, வாசு ஆகிய மூன்று பேரையும் போலிஸார் போதை தடுப்பு சட்டப்பிரிவில் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் கவுதம்ராஜா என்பவர் தான் இந்த போதைப் பொருட்களை விற்றுவந்துள்ளார் என்பது தெரியவந்தது.

பின்னர் அவரிடம் இருந்து 2,100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மாத்திரைகளை கவுதம்ராஜா எங்கிருந்து பெற்றார், இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த போதைப் பொருட்களை பயன்படுத்தியதால் மேலும் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.