Tamilnadu

லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்க மாஸ்டர் ப்ளானாக பயன்பட்ட ‘வெப் சீரிஸ்’ : மணிகண்டன் பகீர் வாக்குமூலம்!

திருச்சி லலிதா ஜூவல்லரியில் அண்மையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சிக்கியுள்ள கொள்ளையர்களில் ஒருவனான மணிகண்டன், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலிஸாரிடம் தெரிவித்துள்ளான்.

லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே ப்ளான் போடப்பட்டதாக கூறியுள்ள மணிகண்டன், முக்கியமான ஒரு வாக்குமூலத்தையும் அளித்துள்ளான்.

அதாவது, இந்த ஒட்டுமொத்த கொள்ளைச் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது திருவாரூரைச் சேர்ந்த முருகன். இவர், நெட்ஃபிளிக்ஸில் வரும் Money Heist என்ற வெப் சீரிஸை பார்த்துதான் சுவரில் துளையிடுதல், ஜோக்கர் மாஸ்க், கையில் கிளவுஸ் என பல உத்திகளைக் கையாண்டதாக மணிகண்டன் கூறியிருக்கிறான்.

இந்த திருவாரூர் முருகன் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் உள்ள வங்கி, ஏடிஎம் என பல்வேறு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வரும் இந்த முருகனுக்கு ஒரு ஆள் செல்லும் அளவுக்கு சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது Money Heist சீரிஸ் தான் என மணிகண்டன் கூறியுள்ளான்.

Money Heist சீரிஸில் வரும் பிரதான கதாபாத்திரத்துக்கு உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கான கொள்ளையனாக வரவேண்டும் என்பதே லட்சியம். அவ்வாறு கொள்ளையில் ஈடுபடுவதற்காக அந்தக் கொள்ளைக் கூட்டம் திட்டம் தீட்டி செயல்படுவது தான் அந்த வெப் சீரிஸின் மையக் கருவாக இருக்கும்.

அந்த வகையில், சுவற்றில் துளையிடுவதில் திருவாரூர் முருகன் கைதேர்ந்தவன். மணி ஹீஸ்டில் வருவது போல வேனுக்குள்ளேயே இருந்து எங்களை வழிநடத்தி முருகன் கச்சிதமாக கொள்ளையில் ஈடுபடுவார் எனத் தெரிவித்துள்ளான் மணிகண்டன்.

இதுமட்டுமல்லாமல், மேலும் பல பகீர் பின்னணிகளையும் கூறியுள்ளான் மணிகண்டன். கொள்ளையடிக்கும்போது அணிந்திருந்த மாஸ்க், க்ளவுஸ் ஆகியவற்றை ஃபேன்ஸி ஸ்டோர்களில் வாங்கியதாகவும், உள்ளே இரண்டு பேரும், வெளியே சிக்னல் கொடுப்பதற்காக ஒரு ஆளும் இருக்க வைத்தோம் என்ற்உம் என்றான்.

சத்தம் போட்டு சிக்னல் கொடுத்தால் சிக்கிவிடுவோம் என்பதற்காக காலில் கயிற்றைக் கட்டிக்கொண்டதாகவும், அதே சமயம், தொடர்ந்து வட மாநிலக் கொள்ளையர்கள் கொள்ளையடித்து வருவதால் போலிஸாரின் கவனமும் அவர்கள் மீது திரும்பிவிடும் என்ற அதீத நம்பிக்கையில் நகைகளை கொள்ளையடித்தோம் என்றும், ஆளுக்கு 5 கிலோ தங்கத்தை பிரித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான் மணிகண்டன்.

இதனையடுத்து, வேனில் சுற்றித்திரியும் திருவாரூர் முருகனை பிடிப்பதற்காக ஒரு செக் போஸ்ட் விடாமல் அனைத்து பகுதியிலும் சோதனை செய்து வருகின்றனர் தனிப்படை போலிஸார்.