Tamilnadu

“பேருந்து நிலையங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா?” - தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம்!

தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள், சுகாதார சீர்கேடுடன் இருப்பதாகவும், பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால் தான் இந்த சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டு சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு, வாழ்வுரிமையை வழங்கியுள்ளதாகவும், அதில் சுகாதாரமான சூழ்நிலையை அனுபவிப்பதும் அடங்கும் எனக் கூறியுள்ள மனுதாரர், மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களைச் சுத்தமாக பராமரிக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு 2015ல் மனு அளித்தும், எந்த பதிலும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெருக்களையும், பொது இடங்களையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், இந்த சட்டப் பிரிவுகளை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, இதுகுறித்து அக்டோபர் 21க்குள் பதிலளிக்கும்படி, தமிழக வருவாய் துறை, உள்துறை, போக்குவரத்து துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை செயலாளர்களுக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிட்டுள்ளது.