Tamilnadu

விழிப்புணர்வு பேரணிக்காக வந்த கல்லூரி மாணவர்கள் : ஏமாற்றி கட்சியின் பாதயாத்திரைக்கு அழைத்துச் சென்ற பாஜக!

ஈரோடு மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி பாதயாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என மாநகராட்சி அலுவகத்தில் கூடினார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவில் கூட்டம் கூடவில்லை என்பதால் பாதயாத்திரைச் செல்லாமல் அங்கேயே நீண்ட நேரம் காத்திருந்தனர்.

அப்போது, தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்காக அங்கு கூடினார்கள். இந்த தகவலை அறிந்த பா.ஜ.க நிர்வாகிகள் அங்கிருந்த மாணவ - மாணவிகளிடம் பேசி தங்களின் பாதயாத்திரையை துவக்கினார்கள்.

அதில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணிக்காக வந்திருந்த என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவ - மாணவிகளும் பா.ஜ.க பாதயாத்திரையில் கலந்துக்கொண்டனர். எந்த நிகழ்ச்சிக்காக தங்களை அழைத்து வந்தனர் எனத் தெரியாமல் மாணவ - மாணவிகளும் பா.ஜ.க-வினர் நடத்திய பாத யாத்திரையில் நடந்து சென்றனர்.

அதனையடுத்து, அரைமணி நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தனியார் கல்லூரி நிர்வாகிகள் மாணவ - மாணவிகளை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவர் ஒருவருக்கு செல்போன் மூலம் அழைத்து பேசியுள்ளார். அப்போது மாணவர், நாங்கள் பா.ஜ.க பாதயாத்திரையில் நடந்து செல்வதாக கூறியுள்ளார்.

இதனைக்கேட்ட நிர்வாகி, பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணிக்காகதான் வந்துள்ளோம், அதே இடத்தில் நில்லுங்கள் என கூறி உடனடியாக பா.ஜ.க பாத யாத்திரை சென்ற இடத்தை அறிந்து மாணவ - மாணவிகளை மீண்டும் அழைத்து வந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இந்த சம்பவத்தின் போது பா.ஜ.க நிர்வாகிகளுக்கும், கல்லூரி நிர்வாகிகளுக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்த வந்த மாணவிகளை பாதயாத்திரைக்கு பா.ஜ.க-வினர் அழைத்துச் சென்றது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.