Tamilnadu

காவல்துறைக்கு கைகொடுத்த வடிவேலு : மீம் வழியாக மக்களை அணுகும் நெல்லை மாநகர காவல்துறை!

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மீம் முயற்சியை கையில் எடுத்துள்ளது நெல்லை மாநகர காவல்துறை.

தற்போதைய சமூக ஊடக சூழலில், எத்தகு விஷயங்களையும் மீம் மூலம் வெளிப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மத்தியில் மீம் கலாசாரம் வெகுவாகப் பரவியிருப்பதால், அவர்களைக் கவர மீம் வழியிலேயே சென்றுள்ளது நெல்லை மாநகர காவல்துறை.

நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக சமீபத்தில் பொறுப்பேற்றார் சரவணன். அவர் பொறுப்பேற்றதற்குப் பின்னர் பொதுமக்கள் நலனுக்காக பல சிறப்பான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நெல்லை மாநகரக் காவல்துறைக்கு ஃபேஸ்புக், ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம், யூ-ட்யூபிலும் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. அதில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடிவேலு நகைச்சுவைக் காட்சிகளை வைத்து மீம் பதிவிட்டு வருகின்றனர்.

தலைக்கவசம் அணிவதன் அவசியம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மீம்கள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காவல்துறையின் இந்த முயற்சி சமூக வலைதள பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.