Tamilnadu

“யூரியா உரம் கிடைக்காமல் திண்டாடும் விவசாயிகளுக்கு உதவுக” - மத்திய மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் யூரியா உர தட்டுப்பாட்டைப் போக்கவேண்டும் என மத்திய - மாநில அரசுகளை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டு அறிக்கையில், “தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடந்த விவசாயிகள் குறை தீர்வுக் கூட்டங்களில் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது என்று விவசாயிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். ஆண்டுக்கு 5,50,000 டன் யூரியா உரம் தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது. இதில் மத்திய அரசின் சார்பில் 60 விழுக்காடு விநியோகிக்கப்படும். மீதமுள்ள 40 விழுக்காடு உரம் தமிழகத்தில் ஸ்பிக், மணலி உரத்தொழிற்சாலை மற்றும் மங்களூர் உரத் தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கும்.

தமிழகத்தில் இயங்கி வரும் ஸ்பிக் உள்ளிட்ட ஆலைகளின் உற்பத்தி நின்று போனதால், யூரியா உரத்திற்கு கூட்டுறவு வேளாண் மையங்களையே விவசாயிகள் நம்பி இருக்கின்றனர். அங்கும் போதுமான அளவு யூரியா விநியோகிக்கப்படாததால், தனியார் விற்பனை நிலையங்களை நாடுகின்றனர்.

உர உரிமம் பெற்ற சில்லறை நிலையங்களிலும் யூரியா உரம் விற்பனை நடக்கிறது. 45 கிலோ யூரியா அதிகபட்சமாக 266 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து உர நிலையங்களிலும் இருப்பு, விலை விபர விலைப்பட்டியல் வைக்கவேண்டும் என்று வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால், உர விற்பனையாளர்கள் நடைமுறையில் செயல்படுத்துவது இல்லை.

தற்போது பருவ மழை பெய்ததால் தென் மாநிலங்களிலும் யூரியா பயன்பாடு அதிகரித்து, தமிழ்நாட்டிற்கு தேவைக்கு ஏற்ப யூரியா உரம் கிடைக்கவில்லை. இதனால் யூரியா விலையை ரூ.50 முதல் 70 வரை கூடுதலாகக் கொடுத்து வாங்கவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

உர விற்பனையாளர்கள் யூரியா விலையை அதிகரித்து விற்பதைத் தடுக்க, தமிழக அரசின் வேளாண்துறை மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்வதோடு, தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி யூரியா கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும்.

தமிழகத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு கூடுதலாக உரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப யூரியா உரங்கள் கிடைக்க மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.