Tamilnadu

மாமல்லபுரத்தில் இந்திய - சீன பேச்சுவார்த்தை : சாலையோர வியாபாரிகளை வதைக்கும் தமிழக அரசு !

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் வருகிற அக்டோபர் மாதம் 11ம் தேதி தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த செய்தி தற்போது இந்திய ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தே பாதுகாப்பு கெடுபிடிகள் பின்பற்றப்படுகிறது. இதனையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள குடியிருப்புவாசிகளின் அடையாள அட்டையை சரிபார்த்து அனுமதிப்பது உள்ளிட்ட பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மோடியுடனான சந்திப்பின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மாமல்லபுர கடற்கரை கோவில், அர்ஜுணன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட கற்கால நினைவுச் சின்னங்களை சுற்றிப்பார்க்க உள்ளார்.

இதனால், அந்த சுற்றுலாப் பகுதிகளில் இருக்கும் 100 கணக்கான சாலையோர கடைகளை தற்காலிகமாக அகற்ற அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக கடந்த 21ம் தேதி மாமல்லபுரம் சென்று ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் சண்முகம், அப்பகுதிகளில் இருக்கும் கடைகளை 3 நாட்களுக்குள் அகற்றி சுத்தமாக வைத்திருக்கும்படி மாமல்லபுர நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் கடற்கரைக்கு அருகே உள்ள கடைகள், ஐந்து ரதம், அர்ஜுணன் தபசு உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் கூடும் பகுதிகளில் உள்ள சிறு, குறு கடைகளை அகற்றியுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையால் அடுத்த 20 நாட்களுக்கு வியாபாரம் மேற்கொள்ள முடியாத நிலைக்கு கடைக்காரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், தினந்தோறும் கொடுக்க வேண்டிய கடனை அடைப்பதிலும் கடை நடத்துவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் புலம்பி வருகின்றனர்.