Tamilnadu

ஒரேநாளில் வடமாநில கொள்ளையர்களை மடக்கிய போலிஸால், பேனர் வழக்கில் தலைமறைவான ஜெயகோபாலை பிடிக்கமுடியாதது ஏன்?

சென்னை பள்ளிக்கரணையில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மகனின் திருமணத்திற்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் விழுந்து ஐ.டி ஊழியர் சுபஸ்ரீ மரணமடைந்த நிலையில் 12 நாட்கள் ஆகியும் முன்னாள் கவுன்சிலர் ஜெய்கோபால் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையே, நங்கநல்லூர் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் செப்டம்பர் 20ம் தேதி 100 சவரனுக்கு மேல் தங்கநகைகள் கொள்ளை நடைபெற்றன. இந்த வழக்குகளை விசாரித்த காவல்துறை தரப்பு சி‌சி‌டி‌வி காட்சிகள் மூலம் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தவர்கள் என்று கண்டுபிடித்துள்ளனர்.

கொள்ளையர்கள் வடமாநிலத்திற்குச் தப்பிச் சென்ற நிலையில் 2 உதவி ஆணையர்கள் மற்றும் 6 ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் தப்பிச் சென்ற 7 கொள்ளையர்களையும் மத்திய பிரதேச மாநிலத்தில் பிடித்திருக்கிறார்கள்.

குற்றச் சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதாக நேற்று மாலை சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினார்கள். இதில் கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேமானந்தா சிம்கா, இணை ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் காவல்துறை அதிகாரிகளிடம், “24 மணி நேரத்தில் வெளிமாநிலம் சென்று குற்றவாளிகளைப் பிடித்தது சரி... சுபஸ்ரீ மரணத்தில் தொடர்புடைய அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் 10 நாட்கள் கடந்தும் இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை” என்று கேள்வி எழுப்பினர்.

பத்திரிகையாளர்களின் இந்தக் கேள்வியால் தடுமாறிய அதிகாரிகள், இந்தச் சந்திப்பு இதற்காக மட்டும்தான் என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டனர். பேனர் வழக்கில் போலிஸார் அமைதி காப்பதற்கு ஆளும்கட்சித் தலைமையின் அழுத்தமே காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அதிகாரிகள் தான் சுபஸ்ரீ வழக்கையும் விசாரித்து வருவது குறிப்பிடதக்கது. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மட்டும் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஒட்டுமொத்தக் குடும்பமே தலைமறைவாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

- சி.ஜீவா பாரதி