Tamilnadu

தமிழக அரசுக்கு ஒதுக்கும் நிதியெல்லாம் எங்கேதான் செல்கிறது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியெல்லாம் எங்கே செல்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 7,243 செவிலியர்கள் சுமார் 8 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான தொகுப்பூதிய அடிப்படையில் கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் கடந்த 2017ம் ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் மருத்துவ பணிகள் பாதிக்கப்படுவதால் செவிலியர் போரட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி கணேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செவிலியர்களுடன் 6 மாதங்களில் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கவும், சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கவும் கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் சுகாதாரத்துறை செயலாளர் தலைமையிலான குழுவிடம், செவிலியர்கள் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்தாக கூறி செவிலியர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவத் துறையில் உருவாகி வரும் காலியிடங்களுக்கு ஏற்ப செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருவதாகவும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களின் ஊதியமானது 14 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பதில் மனுவுக்கு செவிலியர்கள் சங்கம் தரப்பில், சமவேலை, சம ஊதியம் தொடர்பாக இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பு, நிதி பற்றாக்குறை இருப்பதாகவும், காலிப்பணியிடங்கள் உருவாகும்போது செவிலியர்கள் நிரந்தரம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கப்படும் டன் கணக்கிலான நிதியெல்லாம் எங்கே தான் செல்கிறது? செவிலியர்கள் ஊதிய பிரச்சனைக்கு தீர்வு காண ஏன் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த விவகாரத்தில் சுகாதாரத் துறை செயலாளரின் பதில் மனுவும் தெளிவாக இல்லை எனக் கூறி அரசு பதிலளிக்க கால அவகாசம் வழங்கி வழக்கை அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.