Tamilnadu

“அடுத்த செமஸ்டர் முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் மதிப்பீடு” - அண்ணா பல்கலை. துணைவேந்தர் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் கிளம்பிய நிலையில், அடுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் திருத்தப்படும் என துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சூரப்பா பேசியதாவது, “அடுத்த பருவத்தேர்வு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள்கள் திருத்தப்படும்.

சீர்மிகு பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு உரிய நிதியை மாநில அரசு வழங்க வேண்டும்.

என் அமெரிக்க பயணத்தின் போது அங்குள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுவது குறித்து பேசி உள்ளேன். அதுகுறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்” என்று அவர் தெரிவித்தார்.