Tamilnadu

“அரசுப் பள்ளி கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்களை அனுமதிப்பது ஆபத்து” : ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும், குறிப்பிட்ட பள்ளிகளில் மாணவர்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லவும் இது வழிவகுக்கும் என மாணவர் அமைப்பினர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழக அரசு சீர்த்திருத்தங்கள் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை கல்வித்துறை அழிவுப்பாதைக்கு எடுத்துச் செல்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளில் தலையிட்டு கற்பித்தல், மருத்துவம், உளவியல் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கியிருப்பது படிக்கும் மாணவர்களிடையே மன உளைச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும். மேலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.

திடீரென்று புதியவர்கள் கற்பித்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டால் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதோடு கற்றல் பணியும் பெரிதும் பாதிக்கும். இயக்குநரின் சுற்றறிக்கையில் கற்றல்- கற்பித்தல் பணி மற்றும் தேர்வு பாதிக்காத வகையில் என்றால் எந்த நேரத்தில் அல்லது விடுமுறை காலத்திலா? எனத் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை பள்ளியின் வளர்ச்சி, உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்றவற்றிற்குப் பயன்படுத்தலாமே தவிர கற்பித்தல் நிகழ்வுகளில் ஈடுபடுத்தினால் மாணவர்களின் மனநலம் பாதிப்பதோடு பாதுகாப்பிற்கும் உறுதியில்லை. மேலும் ஆசிரியர்களின் மீதுள்ள நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாக்கப்படுகிறது.

தேசியக் கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையிலும் உள்ளூர் கல்வியாளர்களைக் கொண்டு பாடம் நடத்தவேண்டும் என்பதை நீக்கவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கும், மாநில அரசுக்கும் வலியுறுத்திட கருத்துரைகள் வழங்கியிருக்கின்றோம்.

இந்நிலையில், தேசியக் கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளதை அமல்படுத்துவதில் பள்ளிக்கல்வித்துறை முனைப்புக் காட்டுவதை பள்ளிக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அரசுப் பள்ளிகளை காப்பாற்றவும் மாணவர்களின் நலன் கருதியும் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.