Tamilnadu
ஏழைகளின் கல்வியை கிள்ளி எரியாதீர் - 5,8-ம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்த்து ஆசிரியர் மகாலட்சுமி போராட்டம்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பள்ளிகளில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் மாணவர்களின் கல்வித்திறன் வளரும் எனக் கூறி இத்திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பெற்றோர் மற்றும் மாணவர் சங்கம், ஆசிரியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சில மாவட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்று தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை தாலுகா, அரசவெளி என்ற கிராமத்தின் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 13 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிகிறவர் மகாலட்சுமி.
இவர் நேற்றைய தினம் முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் பொதுத் தேர்வை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார்.
அறிவித்தப்படி நேற்றிலிருந்து பள்ளிக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து சென்று, மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கினார். இவரின் போராட்டத்திற்கு ஆதரவாக அப்பள்ளி மாணவர்களும் சக ஆசிரியர்களும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள்.
தனது முகநூல் பக்கத்தில், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு அறிவித்திருக்கும் பொதுத் தேர்வை கைவிடக் கோரி, நாளைமுதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகப் பதிந்திருந்தார். இன்றுமுதல் அவர் பள்ளிக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து சென்று பாடம் நடத்திக்கொண்டே, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், இரண்டு நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மகாலட்சுமி உடல்நிலை குறித்து மாணவர்கள் கவலையை தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
அவரின் போராட்டத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் வாழ்த்துக்களும் குவிந்துள்ளது. இந்தப்போராட்டம் குறித்து ஆசிரியர் மகாலட்சுமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், “5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்பது புதிய தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு அம்சம்தான். தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் இலவச கட்டாயக் கல்வி முறையின் மூலமாக தான் மாணவர்களின் இடைநிற்றல் குறைந்தது.
அப்படி இருந்தும் பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த பொதுத் தேர்வின் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர், இந்த மனநிலையை கண்கூடாக பார்க்கிறேன்.
தமிழகத்தில் ஏழைக் குழந்தைகள், மலைவாழ் குழந்தைகளுக்கு இந்த இலவச அடிப்படை கல்வி சட்டம் பெரிதும் உதவுகிறது. இந்நிலையில் இந்த பொதுத் தேர்வு முறை நடைமுறைக்கு வந்தால் இந்த மாணவர்களின் கல்வியை முளையிலே கிள்ளி எறிவது போல் ஆகிவிடும். ஏழை மாணவர்களை வாழவிடுங்கள்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!