Tamilnadu

விவசாயக் கடன் தள்ளுபடி விதிகளை பரிசீலனை செய்ய முடியுமா? - தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போருக்கு கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

2017ம் ஆண்டில், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போருக்கு கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. இதனை நீதிபதி பானுமதி அமர்வு இன்று விசாரத்தது.

அப்போது, அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்துவிட்டால் 1,980 கோடி ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும் என தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். அதற்கான நிதி அரசிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

பின்னர், அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்க முடியுமா? அல்லது வறட்சி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்காவது கடனை தள்ளுபடி செய்ய முடியுமா? அல்லது வட்டி மீது சலுகையாவது வழங்க முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக 4 வாரகாலத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.