Tamilnadu

லாபம் என்கிறது அரசு; நஷ்டம் என்கிறார் அமைச்சர் - சிபிஐ விசாரணை கோரி ஆவின் ஊழியர்கள் மு.க.ஸ்டாலினிடம் மனு

ஆவின் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தினர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர்கள், மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், ஆவின் பால் நிறுவனம் தற்போது 300 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டத்தில் இயங்குவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிவரும் நிலையில், 150 கோடி ரூபாய் நிகர லாபத்தில் அந்நிறுவனம் இயங்கி வருவதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழக அரசு மற்றும் அமைச்சரின் முரண்பட்ட தகவல்களால் ஆவின் நிறுவனத்தில் நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த அரசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆவின் நிறுவனத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் பங்குள்ளதாக தெரிகிறது. எனவே கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை சந்தித்த வருவாய் இழப்புகளை ஈடுகட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில், விலைவாசி உயர்வு மற்றும் நிர்வாக செலவுகளை ஈடுகட்ட ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. ஆவினில் ஆளும் கட்சியினர் நடத்தும் முறைகேடுகளை தடுத்திருந்தாலே, அந்நிறுவனம் லாபம் கண்டிருக்கும். விலையை உயர்த்த வேண்டிய தேவையும் இருக்காது எனக் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தன. ஒருவேளை லாபத்தில் தான் இயங்குகிறது என்றால், ஒரு அரசு நிறுவனம் விலையை உயர்த்த வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது.