Tamilnadu

என்னதான் நடக்கிறது பள்ளிக்கல்வித்துறையில்?: முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகளால் அவதியுறும் மாணவர்கள்!

சமீபகாலமாக, பள்ளிக் கல்வித்துறையின் பெயரில் சுற்றறிக்கை வெளியாவதும், பின்னர் அத்துறையின் அமைச்சரோ, அதிகாரிகளோ அதை மறுப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததின விழாவை கொண்டாடும் வகையில் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாகவும், காலாண்டு விடுமுறை ரத்து என்றும் இன்று தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தனர்.

காலாண்டு விடுமுறை விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிக்கையும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் ஒரு அறிக்கையும் வெளியிடுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் நலன் கருதி முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து பழைய நடைமுறையே தொடர்ந்திட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், காலாண்டு விடுமுறை தொடர்பாக வெளியான தகவலை பள்ளிக் கல்வித்துறை மறுத்துள்ளது. காலாண்டு விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், விருப்பமுள்ள பள்ளிகள் காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் முன்னுக்குப் பின் முரணான இந்த அறிவிப்புகள் பலருக்கும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளன. 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது ஏற்கனவே சர்ச்சைகளை உண்டாக்கியிருக்கிறது.

இந்நிலையில், தொடர்ந்து மாணவர்களின் கல்வியிலும், எதிர்காலத்திலும் விளையாடும் வேலையை அரசும், அதிகாரிகளும் செய்து வருவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.