Tamilnadu
பெண்ணின் குறையை காரணம் காட்டி திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் : அதே பெண்ணைக் கரம் பிடித்த வாலிபர்!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கிராமம் திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் அப்பகுதியில் உள்ள கொரியர் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் பலவன்சாத்து குப்பம் பகுதியைச் சேர்ந்த ரோஜா பிரியா என்பவருக்கும் கடந்த மாதம் திருமணத்திற்கு பேசி முடிக்கப்பட்டது.
அதன்படி அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, நிச்சயிக்கப்பட்டபடி, நேற்று முன்தினம் திருமணத்திற்கு மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மண்டபத்தில் கூடி இருந்தனர். இந்நிலையில் திடீரென மணமகன் ரவியின் வீட்டார் “இந்தப் பெண் வேண்டாம்... திருமணத்தை நிறுத்துங்கள்” எனக் கூச்சலிட்டனர். இதனால் கூடியிருந்த உறவினர்கள் மற்றும் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். திருமணக் கோலத்தில் இருந்த ரவியும் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் அதிர்ச்சியில் இருந்த பெண் வீட்டார் ரவி குடும்பத்தினரிடம் இதுகுறித்து கேட்டபோது, “பெண் பேசும்போது வாய் திக்குகிறது. மனநிலை கோளாறு உள்ளது, அதனால் இந்தப் பெண் எங்கள் வீட்டுக்கு வேண்டாம்” என்று காரணம் கூறியுள்ளனர்.
ஆனால் இதைப் ஏற்றுக்கொள்ளாத ரவி தனது குடும்பத்தினரை சமதானம் செய்ய முயற்சி எடுத்தார். ஆனால் அவர்கள் சமாதானம் ஆகாத நிலையில், “உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நான் கவலைப்பட முடியாது. நான் இவரைத்தான் திருமணம் செய்வேன்” என்று வீட்டை எதிர்த்து பேசினார்.
ஆனால், ரவியின் குடும்பத்தினர் தொடர்ந்து திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மணக்கோலத்தில் இருந்த ரவி அருகில் உள்ள வேலூர் வடக்கு காவல்நிலையத்திற்கு தன் பெற்றோர் மீது புகார் கொடுத்தார். மேலும், “பெண்ணின் குறைகளைத் தெரிந்தே தான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்துவிட்டேன். ஆனால் என் வீட்டில் உள்ளவர்கள் எதிர்க்கிறார்கள். எனவே நீங்களே திருமணம் செய்து வையுங்கள்” என்று கோரிக்கையும் வைத்தார்.
இதனையடுத்து போலிஸார் இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசினார்கள். ஆனால் ரவி குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறை அதிகாரி, “ரவியின் திருமணம் அவரது தனிப்பட்ட விருப்பம். அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை; திருமணத்தில் விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டால் போதும், மீறி பிரச்னை செய்ய நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.
மேலும், ரோஜா பிரியாவுடன் பதிவுத் திருமணம் செய்துகொள்ளுமாறு ரவியிடம் போலிஸார் அறிவுறுத்தினர். இதனையடுத்து பதிவுத் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்து கடிதம் ஒன்றையும் எழுதிக்கொடுத்தார். மணமகன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரியாவின் வீட்டிற்கு சென்றனர்.
கொடுத்த வாக்குறுதிக்காக தனது குடும்பத்தினரையே எதிர்த்து ரவி எடுத்த துணிச்சல் முடிவை பலரும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!