Tamilnadu

மோப்பநாயிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மிளகாய்ப்பொடி தூவி திருட்டு : தப்பிக்க முயற்சித்து சிக்கிய திருடன்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கிராமத்தில் உள்ள காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சிவசாம்பு. இவர் வீட்டை சதீஷ் என்ற திருடன் கடந்த ஒருவாரமாக நோட்டமிட்டுள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவசாம்பு வெளியூர் சென்றுள்ளார். இந்தச் சூழலை சாதகமாக பயன்படுத்தி வீட்டில் கொள்ளையடிக்க சதீஷ் முடிவு எடுத்துள்ளான்.

அதன்படி, நேற்று அதிகாலையில் வீட்டின் முன்பகுதி வழியாக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற சதிஷ், பீரோவில் இருந்து நகைகள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடியுள்ளான். ஓய்வு பெற்ற போலிஸ் என்பதால் விரைவில் பிடித்துவிடுவார்கள் என எண்ணிய சதிஷ், மோப்ப நாய் மூலம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக சமையல் அறையில் இருந்த மிளகாய்ப் பொடியை வீட்டினுள் அவன் சென்ற இடத்தில் எல்லாம் தூவி விட்டு வெளியே செல்லத் தயாராக இருந்தான்.

அப்போது திடீரென வீட்டிற்கு வந்த சிவசாம்பு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டு உள்ளே சென்றார். அங்கு தப்பிக்க முயற்சி செய்த சதீஷை பார்த்து திருடன் என்று கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, சதீஷ் அங்கிருந்து தப்பிப்பதற்கு வீட்டின் சுவற்றில் இருந்து ஏறி வெளியே குதித்துள்ளான்.

அப்போது கால் தவறி விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டு எழுந்திருக்கமுடியாமல் இருந்த சதீஷை அப்பகுதி மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் போளூர் காவல் நிலையத்தில் போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சிவசாம்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, திருடிய நகை மற்றும் பணத்தை சதீஷிடம் இருந்து மீட்டு சிவசாம்புவிடம் ஒப்படைத்தனர். சதிஷ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏறப்படுத்தியுள்ளது.