Tamilnadu

7 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிப்பாதையாகும் அண்ணா சாலை - என்னென்ன போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

சென்னையில் உள்ள அண்ணா சாலை மெட்ரோ ரயில் பணிகளுக்காக, கடந்த 2012ம் ஆண்டு ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இருவழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அண்ணா சாலையின் ஒரு பகுதியான ஜி.பி.சாலை முதல் ஒயிட்ஸ் சாலை வரை மீண்டும் இருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக இன்று(11-09-2019) மற்றும் நாளை(12-09-2019) ஆகிய இரு நாட்கள் சோதனை ஓட்டம் விடப்படுகிறது.

அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த போக்குவரத்து மாற்றங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

போக்குவரத்து மாற்றங்கள்:

1. அண்ணா சாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெலிங்டன் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

2. தற்போது ஜி.பி.ரோட்டில் நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு, ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வாகனங்கள் வெலிங்டன் சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுகிறது. மாறாக வெலிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிகூண்டு வரை வாகனங்கள் செல்லத் தடை செய்யப்படுள்ளது.

3. அதனையடுத்து ஒயிட்ஸ் ரோடு இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

4. ராயப்பேட்டையில் மணிக்கூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை நோக்கியும், அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டை நோக்கியும் ஒயிட்ஸ் ரோட்டில் அனுமதிக்கப்படுகிறது.

5. ஸ்மித் ரோடு ஒரு வழிப்பாதையாகவே முன்பு இருந்தது போன்றே ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதிக்கப்படுகிறது.

6. அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகனப் போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

7. அண்ணா சிலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி மற்றும் டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லலாம்.

8. அண்ணா சிலையில் இருந்து பின்னி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் செல்லலாம்.

9. பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.ரோடு மற்றும் ஒயிட்ஸ் ரோடு வழியாக அண்ணா சாலை சென்றடையலாம்.

10. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து (வெஸ்ட் காட் ரோடு) அண்ணா சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அடைந்து ஒயிட்ஸ் ரோடு மற்றும் ஜி.பி.ரோடு வழியாகச் செல்லலாம்.

11. பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணா சாலை மற்றும் அண்ணா மேம்பாலம் செல்லலாம்.

12. பின்னி சாலையில் இருந்து பாரதி சாலை செல்ல அண்ணா சாலை பட்டுலாஸ் சாலை வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி ஒயிட்ஸ் ரோடு மற்றும் ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாகச் செல்லலாம்.

13. பின்னி சாலையில் இருந்து ஒயிட்ஸ் ரோடு செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணா சாலை பட்டுலாஸ் சாலை வழியாகச் சென்று ஒயிட்ஸ் ரோட்டிற்குச் செல்லலாம்.

14. கிரீம்ஸ் சாலையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்ல வேண்டிய வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் U Turn and Right Turn எடுத்து அண்ணா மேம்பாலம் மற்றும் ஒயிட்ஸ் சாலை செல்லலாம்.

15. அண்ணா சாலையில் இருந்து ஸ்மித் ரோடு வழியாக ஒயிட்ஸ் ரோடு செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது.

16. ஒயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை செல்லும் வாகனங்கள் திரு.வி.க. சாலையில் இடதுபுறம் திரும்பி பின்னர் சத்யம் தியேட்டர், கான்டான் சுமித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்”. என இவ்வாறு போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த பாதை திறக்கப்படுவதற்கு முன்பு அதிகாரிகள் வர தாமதமானதால் போக்குவரத்து கால்துறை அதிகாரிகள் நடுரோட்டில் பூசணிக்காய் உடைப்பத்தற்கு நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிறமத்திற்கு உள்ளாகின.