Tamilnadu

மூன்றாவதாக திருமணம் செய்ய முயன்ற மோசடி மன்னன் : நடுரோட்டில் துரத்தித் துரத்தி அடித்து உதைத்த மனைவிகள்!

கோவை மாவட்டம் சூலூர் நேரு நகரைச் சேர்ந்த அரவிந்த் தினேஷ் என்ற இளைஞர் ராசிபாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த 2016ம் ஆண்டு திருப்பூர் கணபதிபாளையத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனால், திருமணமான 15 நாட்களிலேயே பிரியதர்ஷினியை அரவிந்த் கொடுமைப்படுத்தியதால் அந்தப் பெண் தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். மேலும், பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

அரவிந்த் தினேஷ் - பிரியதர்ஷினி

இதனையடுத்து, தனக்கு ஏற்கெனவே திருமணமானதை மறைத்து மேட்ரிமோனி மூலம் வரன் தேடிய அரவிந்த், கரூர் பசுபதி பாளையத்தைச் சேர்ந்த அனுபிரியா என்ற பெண்ணை முதல் மனைவிக்கு தெரியாமல் கடந்த ஏப்ரல் மாதம் அரவிந்த் மணமுடித்துள்ளார். அனுபிரியாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், பிரியதர்ஷினியை அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தியது போல் அனுபிரியாவையும் அரவிந்த் தினேஷ் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அனுபிரியாவும் தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, 2 மனைவிகளும் பிரிந்து சென்றதை சாதகமாக்கிக் கொண்டு மூன்றாவது திருமணம் செய்ய முயற்சித்துள்ளார் அரவிந்த் தினேஷ். இதனையறிந்த இரண்டு மனைவிகளும் அவர்களது குடும்பத்தினரும் அரவிந்த் தினேஷை நேரில் சந்தித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அப்படித்தான் செய்வேன் என திமிராக அரவிந்த் தினேஷ் பதிலளித்ததாக கூறப்படுகிறது.

அரவிந்த் தினேஷ் - அனுப்பிரியா

பின்னர், அரவிந்த் பணிபுரியும் தொழிற்சாலைக்கே சென்ற இரண்டு மனைவிகளும், அவரை வெளியே அனுப்பும்படி கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு நிர்வாகம் மறுத்ததால் அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் விரைந்து வந்த சூலூர் போலிஸார் அரவிந்த்தையும், அவரது இரண்டு மனைவிகளையும் காவல் நிலையத்துக்கு வரும்படி கூறியுள்ளனர்.

இந்த நிலையில், போலிஸாரை சந்திக்க தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் தினேஷை மடக்கி பிடித்து, 2 மனைவிகளும், அவர்களது குடும்பத்தினரும் நடுரோட்டில் ஓட ஓட துரத்தித் துரத்தி அடித்து துவம்சம் செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர், அரவிந்த்தை அவரது மனைவிகளிடம் இருந்து மீட்டு போலிஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பிறகு அரவிந்த் தினேஷ் மீது தங்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், மீண்டும் மூன்றாவதாக திருமணம் செய்ய முயன்றதாகவும் 2 மனைவிகளும் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதற்கு போலிஸார் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது மட்டுமல்லாமல் மூன்றாவது முறையாக திருமணம் செய்ய முயன்ற நபரை, 2 மனைவிகளும் துரத்தித் துரத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.