Tamilnadu

திருட்டு வாகனத்தில் பிரஸ் ஸ்டிக்கர்; தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட போலி பத்திரிக்கையாளர் கைது!

தமிழகம் மற்றும் கேரளாவில் கொலை - கொள்ளைகளில் ஈடுபட்டுவந்தவரை கன்னியாகுமரியில் போலிஸார் கைது செய்துள்ளனர். போலிஸாரின் சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்கு PRESS என்ற பத்திரிகையாளர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கரை ஒட்டி ஏமாற்றி வந்தது போலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவரை நிறுத்தி போலிஸார் சோதனை செய்தனர். சோதனையின் போது அவர் கொண்டுவந்த புல்லட் பைக் குறித்து ஆவணங்கள் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் பேசியுள்ளார். பிரஸ் ஸ்டிக்கர் உள்ளதே என, அடையாள அட்டை கேட்டுள்ளனர். ஆனால் அதையும் காட்டாமல் சமாளித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் போலிஸாருக்கும் அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்படுட்டுள்ளது.

அதனால் அவரை பிடித்து போலிஸார் விசாரணை நடத்தினர். அவர் ஓட்டி வந்த வாகனத்தின் எண்ணை வைத்து சோதனை செய்தனர். அதில், அந்த எண் போலியானது என்று தெரியவந்தது. மேலும் அந்த நபர் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பதும் தெரியவந்தது.

ராஜேஷ் லில்லிபாய் என்ற பெண்ணை கொலை செய்த வழக்குகாக சிறை சென்றவர். தற்போது தான் வெளியே வந்துள்ளார். வெளியே வந்த அவர் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்களை ஈடுபட்டு வந்திருக்கிறார்.

ராஜேஷ்

கேரளாவில் இருந்து பொருட்களை திருடி, கன்னியாகுமரி பகுதிகளில் விற்றதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக கொல்லம் பகுதிக்குச் சென்று அங்குள்ள கடைகளில் உள்ள விலை உயர்ந்த அதிநவீன கேமராக்களை திருடி தக்கலைப் பகுதிகளில் விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளையன் ராஜேஷ் பயன்படுத்தி வந்த வாகனம் கொல்லம் மாவட்டத்தில் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. போலிஸாரின் சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்கு வாகனத்தில் போலி பதிவு எண்ணை மாற்றி பத்திரிக்கையில் வேலைப் பார்ப்பது போல பிரஸ் ஸ்டிக்கர் ஒன்றையும் ஒட்டி வலம் வந்துள்ளார்.

முன்னதாக கொள்ளையன் ராஜேஷ் குறித்து தகவலை கேரள போலிஸார் அனுப்பி, கைது செய்தால் ஒப்படைக்கும் படியும் கேட்டுள்ளனர். அதனால் கொல்லம் போலிஸாருக்கு கொள்ளையன் ராஜேஷ் பிடிபட்ட தகவலை தெரிவித்தனர். தமிழகத்தில் அவன் மீது வேறு எங்கேயாவது ஏதாவது குற்ற வழக்கு உள்ளதா என்பது குறித்தும் போலிஸார் விசாரத்து வருகின்றனர்.

பின்னர் தமிழகம் வந்த கேரள போலிஸாரிடம் ராஜேஷை ஒப்படைத்தனர். கேரளாவில் கடைகளில் கொள்ளையடித்த குற்றத்திற்காக கேரள போலிஸார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.