Tamilnadu

பள்ளியில் அத்துமீறி நுழைந்து மாணவியை கடத்த முயற்சி : கத்தியைக் காட்டி மிரட்டியவர் போலிஸில் ஒப்படைப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் அத்துமீறி நுழைந்து ஆசிரியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மாணவி ஒருவரை கடத்த முயற்சி செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம். இவர் கருங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவியைக் கடத்தத் திட்டமிட்ட ஜெயராம், மாணவி படிக்கும் தனியார் பள்ளிக்கு தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

நண்பர்களை வெளியில் நிற்க வைத்துவிட்டு ஜெயராம் மட்டும் யாரிடமும் அனுமதி கேட்காமல் மாணவியின் வகுப்பறைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு ஆசிரியர் இருந்ததால் மாணவியின் தந்தை இறந்துவிட்டார், அதனால் அவரை அழைத்து வரச் சொல்லியிருக்கிறார்கள்; என்னோடு அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் ஜெயராம் மீது சந்தேகமடைந்த ஆசிரியர், மாணவியை அனுப்பி வைக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயராம் ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் கோபமடைந்த ஜெயராம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கூச்சலிடத் தொடங்கியுள்ளனர்.

ஜெயராம்

அதனால் பயந்துபோன ஜெயராம் அங்கிருந்து தப்பியோட முயன்றபோது பள்ளி வளாகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவனைப் பிடித்து தாக்கியுள்ளனர். பின்னர் ஜெயராமை பிடித்து வைத்துக்கொண்டு போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ஜெயராமை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அந்த மாணவியும் ஜெயராமும் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளனர். அந்தப் பழக்கத்தை சாதகமாகப் பயன்படுத்தி கடந்த ஜூன் மாதம் மாணவியை கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு ஜெயராம் கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர், மாணவியின் பெற்றொர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 5 நாட்களுக்குப் பிறகு ஜெயராமை போலிஸார் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அதன்பின்பு ஜாமினில் வெளிவந்த ஜெயராம், தற்போது மீண்டும் மாணவியை கடத்தத் திட்டமிட்டதாக போலிஸ் விசாரணையில் ஜெயராம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெயராம் மீது வழக்குப் பதிவு செய்த போலிஸார் அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.