Tamilnadu
காவலர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாமா? : ஆர்.டி.ஐ கேள்விக்கு காவல்துறை பதில் !
கடந்த செப்டம்பர் 3ம் தேதி திருச்சியில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், திட்டக்குடியைச் சேர்ந்த பழனிவேல் என்ற காவலர் ஏறியுள்ளார்.
அவரிடம், பயணச்சீட்டு வாங்கும்படி நடத்துநர் கோபிநாத் கூறியதற்கு தான் போலிஸ் என்பதால் டிக்கெட் வாங்க முடியாது என பழனிவேல் கூறியுள்ளார். இதற்கு அடையாள அட்டையைக் காட்டும்படி கோபிநாத் கேட்டதற்கு அதனையும் காட்ட மறுத்துள்ளார்.
இதனையடுத்து, கோபிநாத்துக்கும், பழனிவேலுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்த நடத்துநர் கோபிநாத்தை அங்கிருந்தவர்கள் நெய்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜி.கே.சுப்பிரமணியன், காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்ய முடியுமா? அதற்கு அனுமதி உள்ளதா? என ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்தக் கேள்விக்கு, காவல்துறை பணியமைப்புக்கான தலைவர் பதில் அளித்துள்ளார். அதில், “காவல்துறையினருக்கு தமிழக அரசுப் பேருந்துகளில் சிறப்பு சலுகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லை. தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் பணி காரணமின்றி, தன்னுடைய சொந்தத் தேவைக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தால் கண்டிப்பாக பயணச்சீட்டு பெறவேண்டும்.
பணி காரணமாக செல்லும்போதும், பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போதும் பேருந்துப் பயண அனுமதி வாரண்ட் பெற்றுத்தான் அரசுப் பேருந்தில் பயணிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அப்படி பயணம் செய்யும்போது பயணச்சீட்டு பெறத் தேவையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், காவல்துறை அடையாள அட்டையை நடத்துநரிடம் காட்டவேண்டியது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!