Tamilnadu
“பொது விநியோகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்” : காங்கிரஸ் கண்டனம்!
பொது விநியோகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் வகையிலான மத்திய அரசின் நடவடிக்கைக்கு அ.தி.மு.க அரசு துணை போயிருப்பதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில், "மத்தியில் பா.ஜ.க ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அதிகாரக் குவியலை நோக்கி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஒற்றை ஆட்சி முறையை அமல்படுத்துவதற்கு பல்வேறு உத்திகளை பா.ஜ.க கையாண்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் அடிப்படையில் மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே தேர்தல் நடத்துவதற்காக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல, மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண தற்போது உள்ள நடுவர் மன்றங்களைக் கலைத்துவிட்டு ஒரே நதிநீர் தீர்ப்பாயத்தை அமைக்க சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர, கல்வி மற்றும் சுகாதாரத்துறையை மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய கூட்டாட்சித் தத்துவத்தை குழி தோண்டிப் புதைக்கிற நடவடிக்கைகளை எடுத்துவரும் பா.ஜ.க அரசு ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முடிவெடுத்திருக்கிறது. இதன்படி வருகிற ஜூன் 1, 2020ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டையை அமல்படுத்த திட்டம் தீட்டி வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் இத்தகைய குடும்ப அட்டைகள் மூலம் எந்த மாநிலத்திலும் நியாய விலைக் கடைகள் மூலம் உணவுப் பொருட்களைப் பெற முடியும்.
தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் மார்ச் 2020ம் ஆண்டுக்குள் நிறைவேற்றுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். இதைவிட மாநில உரிமைகளைப் பறிக்கிற மத்திய அரசுக்குத் துணைபோகிற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே பொது விநியோகத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏறத்தாழ 40 ஆயிரம் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மொத்த குடும்ப அட்டைகள் 1 கோடியே 99 லட்சம். இதில் ஐந்து வகையான குடும்ப அட்டைகள் உள்ளன. அரிசி பெறும் மொத்த அட்டைகள் 1 கோடியே 67 லட்சம். இந்த பொது விநியோகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு அ.தி.மு.க அரசு துணை போயிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதற்கான காரணத்தை மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறுவது மிகுந்த வியப்பையும், ஆச்சரியத்தையும் தருகிறது. நாடு முழுவதும் நான்கரை கோடி மக்கள் பல்வேறு மாநிலங்களில் வேலைவாய்ப்புக்காக தற்காலிகமாகத் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த மாநிலங்களில் குடும்ப அட்டையைப் பயன்படுத்துவதற்கு இயலாத நிலையில் உள்ளதாகவும், அவர்களும் இந்த குடும்ப அட்டையைப் பயன்படுத்துகிற வகையில் தான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.
தற்காலிகமாக பல மாநிலங்களில் குடிபெயர்ந்த நான்கரை கோடி தொழிலாளர்களுக்காக நாடு முழுவதும் உள்ள 23 கோடி குடும்ப அட்டைதாரர்களைப் பாதிக்கிற வகையில் இத்திட்டத்தைச் செயல்படுத்த முனைந்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது. வேறு மாநிலங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காக தற்காலிகமாக வருபவர்கள் குறித்து எந்த உறுதியான புள்ளி விவரமும் இல்லாத நிலையில், எந்த மாநிலத்தில் தங்கியிருக்கிறார்களோ, அங்குள்ள நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களை மலிவு விலையில் வழங்குவது என்பது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும். பெரும்பாலும் குடிபெயர்ந்தவர்கள் தனியாக இருப்பார்களே தவிர, குடும்பமாக இருப்பதில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து குடும்ப அட்டைகளும் மின்னணு மயமாக்கப்பட்டிருந்தாலும், கிராமப்புறங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளினாலும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் காண உரிய ஆவணங்கள் இல்லாத நிலையிலும் பல்வேறு சிக்கல்கள் எழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்தப் பின்னணியில் நடைமுறை சாத்தியமில்லாத இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசு எந்த அடிப்படையில் ஒப்புதல் தந்தது என்று தெரியவில்லை.
வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலமாக உணவுப் பொருட்கள் வழங்கும்போது அந்த நிதிச் சுமையை யார் ஏற்றுக் கொள்வது? தமிழக அரசு ஏற்றுக் கொள்ளுமா? இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு நிதிச் சுமையை ஏற்பதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?
இத்தகைய திட்டங்கள் மூலம் இந்தியாவையே ஒருமுகப்படுத்தி, மத்திய அரசின் அதிகாரக் குவியலை மையப்படுத்தி, அதன்மூலம் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, ஒடுக்குவதற்கு நரேந்திர மோடி அரசு எடுக்கும் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு அ.தி.மு.க அரசு ஒத்துப்போவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்கிற பா.ஜ.க அரசின் திட்டத்திலிருந்து உடனடியாக தமிழக அரசு விலக வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி விலகுவதற்கு துணிவில்லாமல் பா.ஜ.க அரசின் கூட்டாட்சி விரோத நடவடிக்கைகளை நிறைவேற்ற அ.தி.மு.க அரசு தொடர்ந்து துணைபுரியுமானால் அதை எதிர்த்து மாபெரும் மக்கள் இயக்கம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!