Tamilnadu
“366 கி.மீ தூரம்... 4.30 மணிநேர ஆம்புலன்ஸ் பயணம்” : சிறுவனின் உயிரைக் காக்க உதவிய இளைஞர்கள்!
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமீர். 16 வயது சிறுவனான அமீருக்கு முதுகுத் தண்டுவடத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் சமீபகாலமாக அமீர் அடிக்கடி வலியால் துடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் சிகிச்சையில் போதிய பலன் கிடைக்கவில்லை என்பதால் செப்டம்பர் 1ந் தேதி திடீரென இடது கால் செயலிழந்து அமீர் கடும் வழியால் அவதிப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அமீரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அமீரின் நிலை மோசமானதாக உள்ளதால் 8 மணிநேரத்திற்குள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவேண்டும். இல்லையேல் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் விரைந்து வந்து அமீரை ஏற்றிக் கொண்டு மாலை 6 மணிக்கு புதுச்சேரி நோக்கி புறப்பட்டது.
ஆம்புலன்ஸை ராமநாதபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் இஜாஸ் ஓட்டி வந்தார். முன்னதாக நாகை, காரைக்கால், சீர்காழி, பரங்கிபேட்டை உள்ளிட்ட 11 ஊர்களில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இதுகுறித்த தகவல் பகிரப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் இயங்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ராமநாதபுரத்தில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி ஆம்புலன்ஸ் பறந்தது. ஆம்புலன்ஸ் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டதில் இருந்து அமீர் வரும் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்த படியும் சாலையின் ஓரங்களில் நின்றுகொண்டு பிற வாகனங்கள் இடையில் செல்லாமலும் பார்த்துக்கொண்டனர்.
குறிப்பாக அமீர் வந்துகொண்டிருந்த ஆம்புலன்ஸுக்கு முன்னும் பின்னுமாக இரண்டு ஆம்புலன்ஸ் சென்று ஒவ்வொரு ஊர் எல்லை வரை பிற வாகனங்களை சாலையின் ஓரமாகச் செல்லுமாறு அறிவுறுத்திச் சென்றனர். இதுபோல 15 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் புதுச்சேரி செல்லும் வரை உதவி செய்து சென்றுள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் இளைஞர்களின் முயற்சியால் மாலை 6 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் இரவு 11 மணிக்குள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்றடைந்தது. சுமார் 11 மாவட்டங்களை அதாவது 366 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்துள்ளது.
ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனுக்கு அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த தூரத்தைக் கடக்க 8 மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுநருக்கும், உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்தனர்.சிறுவனைக் காப்பாற்ற ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட இந்த அபார முயற்சியை மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!