Tamilnadu

சென்னை : Rapido மூலம் பைக் டாக்ஸி புக் செய்தவரைக் கடத்தி நிர்வாண வீடியோ எடுத்த கும்பல் கைது

’Rapido’ பைக் டாக்ஸி ஆப் மூலம் தம்மிடம் நடத்தப்பட்ட மோசடி குறித்து கடந்த சனிக்கிழமை கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ஸ்ரீகுமார். இவர் தாம்பரத்தில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

ஸ்ரீகுமார் தன் வீட்டிலிருந்து வடபழனியில் உள்ள வணிக வளாகத்துக்குச் செல்ல ‘Rapido’ செயலி மூலம், பைக் டாக்ஸிக்கு பதிவு செய்துள்ளார். நீண்டநேரமாகியும் பைக் டாக்ஸி வராத நிலையில் கார் ஒன்று வந்துள்ளது. மழையாக இருப்பதால் பைக்குக்குப் பதிலாக காரை அனுப்பி வைத்தனர் என அதன் டிரைவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகுமாரும் அதை உண்மை என்று நம்பி காரில் ஏறியதும், கார் வடபழனி நோக்கிச் செல்லாமல் கிண்டி நோக்கிச் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீகுமார் டிரைவரிடம் கேட்க, காரில் வந்தவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 11 ஆயிரம் ரூபாயைப் பறித்துள்ளனர்.

மேலும், சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர் ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் காரிலேயே அழைத்துச் சென்று வீட்டுக்கு முன்பு இறக்கிவிட்டுள்ளனர்.

மேலும், நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்றும், இதுபற்றி போஸிலில் புகார் கொடுக்கக்கூடாது என்றும், 50 ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.

ஸ்ரீகுமாரிடம் புகார் மனுவைப் பெற்ற போலிஸார் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலிஸார் உதவியோடு விசாரித்தனர். விசாரணையில் ஸ்ரீகுமாரை செல்போனில் தொடர்புகொண்டு 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டிய நபர் சரவணன் என்பவரைக் கண்டறிந்து கடந்த ஞாயிறன்று அவரைக் கைது செய்தனர்.

சரவணன் ‘ரேபிடோ’ பைக் டாக்ஸி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவர் ஸ்ரீகுமாரை பல முறை பைக் டாக்ஸி மூலம் அழைத்துச் சென்றுள்ளார். ஸ்ரீகுமாரைக் கடத்திச்சென்று பணம் பறிக்கலாம் என்று நண்பர்களுடன் இணைந்து திட்டம் தீட்டிச் செயல்படுத்தியுள்ளார்.

‘ரேபிடோ’ பைக் டாக்ஸி ஊழியர் சரவணனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தமிழ்செல்வன், மணிகண்டன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ‘பைக் டாக்ஸி’ எனக் கூறிக்கொண்டு நடத்திய இந்த மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.