Tamilnadu

காரில் சென்றவருக்கு ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதித்த போலிஸார் : போலி பதிவு எண் விவகாரமா ?

சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரணிஷ்வரன் நந்தினி தம்பதியினர். பரணிஷ்வரன் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். கடந்த 25ம் தேதி போக்குவரத்து காவல்துறையிடமிருந்து நந்தினிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் 25ம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே உள்ள சாலையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றதால் அபராதம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த வாகன பதிவு எண் அவரது சொகுசு காரின் வாகன பதிவு எண் என்பதைக் கண்டு குழப்பமடைந்த பரணிஷ்வரன் உடனடியாக போக்குவரத்து காவல்துறைக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளார். சரியான பதிலேதும் கிடைக்காததால் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ள தேதியன்று தங்கள் வீட்டில் இருந்து இருவரும் காரில் வெளியே செல்லவில்லை என்றும், காவல்துறையினர் குறிப்பிட்டுள்ள வாகன பதிவு எண் இருசக்கர வாகன எண் இல்லை என்பதையும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறு இந்த தவறு நிகழ்ந்தது என காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. காரில் சென்றவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என போலிஸார் அபராதம் விதித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.