Tamilnadu

திண்டுக்கல் பூட்டுக்கும், காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு: தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் தனித்துவம் வாய்ந்த அடையாளங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசு சார்பில் கடந்த 1999ம் ஆண்டு முதல் புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

அந்த வகையில், திண்டுக்கல் பூட்டுக்கும், காரைக்குடி கைத்தறி சேலைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் என்று கூறியதுமே அனைவரது நினைவுக்கும் முதலில் எட்டுவது பூட்டுதான். 150 ஆண்டுகளுக்கும் மேலாக, 3 தலைமுறையாக திண்டுக்கல் பகுதியில் பூட்டுத் தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகமாக பணம் புழங்கக் கூடிய வங்கிகள், அடகுக்கடைகள், நகைக்கடைகளில் திண்டுக்கல் பூட்டுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற இந்த திண்டுக்கல் பூட்டிற்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி கடந்த 2013ம் ஆண்டு பூட்டுத் தொழிலாளர்கள் சங்கத்தால் விண்ணப்பிக்கப்பட்டது.

அதேபோல, காரைக்குடி கைத்தறி சேலை பாரம்பரியமிக்கவை. இந்த கைத்தறி சேலை நெய்யும் தொழிலும் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஆகையால் ராஜீவ்காந்தி கூட்டுறவு கைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 2013ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், திண்டுக்கல் பூட்டுக்கும், காரைக்குடி கைத்தறி கண்டாங்கி சேலைக்கும் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதனால் நெசவாளர்களும், பூட்டுத் தொழிலாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முன்னதாக, தமிழகத்தின் சேலம் மாம்பழம், மதுரை மல்லி, ராஜபாளையம் நாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, பத்தமடை பாய் உள்ளிட்ட 29 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.