Tamilnadu
100 நாட்களில் இரு மடங்கு லாபம்; மக்களின் ஆசையைத் தூண்டி ஏமாற்றிய மோசடி கும்பல்! - உஷார் ரிப்போர்ட்
சமீப காலங்களில், எம்.எல்.எம் முறையில் மக்களின் ஆசையை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. முதலீடு செய்யும் தொகையை விட இரு மடங்கு லாபம் கொடுப்பதாக கோட்சூட் போட்டுக் கொண்டு மூளைச் சலவை செய்யும், கும்பல்களிடம் மக்கள் சிக்கிக் கொள்கின்றனர். அப்படி ஒரு மோசடி கும்பல் ஈரோடு மாவட்டத்தில் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. ஒரு முறை முதலீடு செய்தால் 100 நாட்களில் இரு மடங்கு அதிக லாபம் தருவதாகக் கூறி, ஆன்லைன் விளம்பரம் மூலம் 15 கோடி ரூபாயை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில், மேற்கு வீதியில் ‘குவாலிட்டி ட்ரேடர்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தங்கராஜ் என்பவர் இயக்குனராகவும், ஆனந்த் மற்றும் பிரகாஷ் ஆகியோர் பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். சில குறிப்பிட்ட மருந்து பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இரு மடங்கு லாபம் என இவர்கள் வெளியிட்ட ஆன்லைன் விளம்பரத்தால், முதலீடுகள் குவிந்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 100 நாட்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் என்ற வீதம் 2,50,000 ரூபாய் வழங்குவதாக அந்த விளம்பரத்தில் உறுதியளித்திருந்தனர்.
இதனை நம்பி முதலீடு செய்தவர்களிடம், ஒரு லட்சம் ரூபாய்கான காசோலையையும், அதற்கான ஒப்பந்த பத்திரம் ஒன்றையும் வழங்கியுள்ளனர். சொன்னது படி, முதலீடு செய்தவர்களின் வங்கிக் கணக்கில் தினமும் 2 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது.
பணம் வருவதால், முதலீடு செய்த பலர், தங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் முதலீடு செய்ய பரிந்துரைத்துள்ளனர். இதனால் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்திருக்கிறது.
தொடக்கத்தில் தவறாமல் கிடைத்த 2 ஆயிரத்து 500 ரூபாய், ஒரு கட்டத்துக்கு மேல் நிறுத்தப்பட்டது. மூன்று மாதங்களாகியும் நிலுவைத் தொகை முதலீட்டாளர் வங்கிக் கணக்குக்கு சென்று சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் தாங்கள் செலுத்திய முதலீடுகளை திருப்பி அளிக்கும் படி நிறுவனத்தை நடத்தி வந்தவர்களிடம் கேட்டுள்ளனர்.
அழுத்தம் அதிகமாகவே நிறுவனத்தை நடத்தி வந்த தங்கராஜ், ஆனந்த், பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் தலைமறைவாகினர். இந்த தகவல் அறிந்த பணத்தை அளித்த மூன்று பேர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். போலிஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஒடிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
இதே போல எம்.எல்.எம் முறையை பயன்படுத்தி பல மோசடி கும்பல்கள், மக்களை ஏமாற்றி வரும் அதிர்ச்சித் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!