Tamilnadu
மருத்துவர்களை அரசு அலட்சியப்படுத்தினால் நோயாளிகள்தான் பாதிக்கப்படுவார்கள் - மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தகுதிக்கு ஏற்ற ஊதியம் வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும், பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 6 பேர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 3 பேர் உடல்நிலை மோசமான காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை தமிழக அரசு நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் உள்ள ஏழை-எளிய, நடுத்தர மக்களின் மருத்துவ சிகிச்சைக்கு ஜீவாதாரமாகத் திகழ்வது அரசு மருத்துவர்களும், அரசு மருத்துவமனைகளும் மட்டுமே. அரசு மருத்துவர்கள் ஒரு நாளைக்கு பல லட்சம் மக்களுக்கு சிகிச்சையளிக்கும் பணிச்சுமையுடன் பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கான நியாயமான ஊதிய உயர்வு வழங்காமல் தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது.
அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பிலும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிலும் வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் காலாவதியான இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறையை மேற்கோள் காட்டி சுமார் 800 மருத்துவர் பணியிடங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு குறைத்துள்ளது.
மேலும் முதுநிலை மருத்துவம் படிப்பை முடித்துள்ள அரசு மருத்துவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி அதன் மூலம் மீண்டும் பணியிட வழங்காதது உள்ளிட்டவைகளை கண்டித்து மருத்துவர்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
இதில் எந்தப் பயனும் ஏற்படாததால் தற்போது மருத்துவர்கள் நான்காவது நாளாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் உடல்நிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பது கவலையளிக்கிறது. இதன் தொடர்ச்சியாக நாளை (27.8.2019) தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்படும் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களை தமிழக அரசு அலட்சியப்படுத்துவது வேதனையளிக்கிறது.
எனவே, தமிழக அரசு இப்பிரச்னையில் உடன் தலையிட்டு மருத்துவ சங்கப் பிரதிநிதிகளை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!