Tamilnadu
“தீவிரவாதிகளின் புகைப்படத்தை நாங்கள் வெளியிடவில்லை; சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” : காவல்துறை தகவல்!
தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்ததையடுத்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாகவும், இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து கோவையில் தங்கியிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை தமிழக போலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்தது,
தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து போலிஸார் கோயம்புத்தூரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். வழிபாட்டுத் தலங்கள், விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற பொதுமக்கள் கூடும் பகுதிகளிலும் புறவழி சாலைகளில் செக்போஸ்ட் அமைத்தும் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தீவிரவாதி எனச் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம், தீவிரவாதிகள் பயன்படுத்துவதாகச் சந்தேகிக்கப்படும் வாகனத்தின் பதிவெண் ஆகியவை போலிஸாரால் வெளியிடப்பட்டதாகத் தகவல் பரவியது.
இந்நிலையில், இந்தத் தகவலை கோவை காவல் ஆணையரும், தமிழக போலிஸ் டி.ஜி.பி திரிபாதியும் மறுத்துள்ளனர். பத்திரிகையாளர்களைச் சந்தித்த கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண் தெரிவித்ததாவது :
“கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் 2,000 போலிஸார் மற்றும் சிறப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதி எனச் சந்தேகிக்கப்படுவோரின் புகைப்படத்தை நாங்கள் வெளியிடவில்லை. பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக போலிஸ் டி.ஜி.பி திரிபாதி, “தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் புகைப்படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!