Tamilnadu

”சென்னை சேலம் இடையே எதற்கு 8 வழிச்சாலை? திட்டமே குழப்பமாக இருக்கிறது” - உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி

சென்னை சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலையை அமைக்க மத்திய மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இதற்காக விவசாயிகளின் நிலங்களை முறையான அனுமதியின்றி கையகப்படுத்தியது எடப்பாடி அரசு. விளை நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உள்ளிட்ட பல தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம், 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தியதை செல்லாது என அறிவித்தது. இதனை எதிர்த்து மத்திய நெடுஞ்சாலைத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அடுக்கக்கடுக்காக பல கேள்விகளை முன் வைத்தது.

அதில், சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதா? 8 வழிச்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? சுற்றுச்சூழல் அனுமதி பெறாவிடில் எதன் அடிப்படையில் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது?

அவசியமான திட்டம் என்றால் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தாமதம் ஆவது ஏன்? சாலை அமைக்க இத்தனை அவசரம் ஏன்? பாரத் மாலா திட்டத்தின் கீழ் 8 வழிச்சாலை உள்ளதா? அப்படி இருந்தால் அதற்கான அறிவிப்பானை எங்கே?

எதற்காக சென்னை, சேலம் இடையே இந்த 8 வழிச்சாலை போடப்படுகிறது? என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்த 8 வழிச்சாலை திட்டம் குழப்பத்தை தான் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், செப்டம்பர் 4ம் தேதிக்குள் 8 வழிச்சாலை தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.