Tamilnadu
எடப்பாடி மீது மணிகண்டன் அதிருப்தி : அமைச்சர் பதவி பறிப்பின் பின்னணி இதுதானா ? விரைவில் கட்சித் தாவல் ?
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் அண்மையில் நீக்கப்பட்டார். இதையடுத்து, அந்த பொறுப்பை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூடுதலாகக் கவனித்துவருகிறார். எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் இருந்து நீக்கப்படும் முதல் அமைச்சர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பின்னணி என்ன என்று விசாரித்ததில், அண்மையில் கேபிள் கட்டணங்களைக் குறைத்து உத்தரவிட்டது தமிழக அரசு. இதை அந்த துறை அமைச்சரான மணிகண்டனிடம் கலந்து ஆலோசிக்காமலேயே கேபிள் டிவி அமைப்பின் தலைவராக உள்ள அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார்.
இதனால், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மணிகண்டன் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் மணிகண்டன் முறையிட்டுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மணிகண்டன் மூத்த அமைச்சர்களிடம் இதைச் சொல்லி புலம்பியுள்ளார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட்டது குறித்து தன்னிடம் முதலமைச்சர் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை எனக் கூறியிருந்தார்.
மேலும், அரசு கேபிள் டிவி தலைவராக உள்ள அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சொந்தமாக கேபிள் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அதில் 2 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் அதை அரசு நிறுவனத்தோடு இணைக்காமல், தனியாக நடத்தி வருவதாகவும் அமைச்சர் மணிகண்டன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சருக்கும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் எதிராக மணிகண்டன் பேசியதால் தான் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் ராமநாதபுரம் தொகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளுக்கும் தான் ஒருவனே காரணம் என்று கர்வத்துடன் நடந்துகொண்டதால், முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவுடன் இவருக்கு மோதல் போக்கு நிலவிவந்தது. மேலும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், அமைச்சர் தன்னை பனி செய்ய விடாமல் தடுப்பதாக முதல்வர் பழனிசாமியிடம் புகார் அளித்திருந்தார். இந்த காரணங்களை எல்லாம் முன்வைத்துதான் மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் மணிகண்டன் விரைவில் அ.தி.மு.க-விலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறுகட்சிக்கு மாறப்போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!