Tamilnadu

கண்ணீரில் நீலகிரி மக்கள்.. களத்தில் ஸ்டாலின் : அமித்ஷாவோடு பிடில் வாசிக்கும் நவீன நீரோ முதல்வர் எடப்பாடி!

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்குள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மண் சரிவு, வெள்ளத்தில் சிக்கி நீலகிரி மாவட்டத்தில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மற்றும் சமுதாய நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மின்சாரம் இல்லாமலும், உரிய நேரத்துக்கு உணவு கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் நேற்றும், இன்றும் பார்வையிட்டு வருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பொதுமக்கள் திரண்டு வந்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை மு.க.ஸ்டாலினிடம் விவரித்து வருகின்றனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த மு.க.ஸ்டாலின், தி.மு.க சார்பில் நிதியுதவியும் வழங்கினார். மேலும், நீலகிரி எம்.பி., ஆ.இராசா தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3 கோடியை நீலகிரி மாவட்டத்திற்கு நிதி உதவியாக அளித்துள்ளார்.

திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, சண்முகம், பி.வில்சன் ஆகியோர் தலா ஒரு கோடி நிதி உதவி அளித்துள்ளனர். தி.மு.க எம்.எல்.ஏ திராவிடமணி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி நிதி அளித்துள்ளார். இப்படியாக, நீலகிரி மாவட்ட மக்களை பேரிடரிலிருந்து மீட்கும் நடவடிக்கைகளைச் செய்து வருகிறது தி.மு.க.

ஆனால், பேரிடரிலிருந்து மக்களை மீட்கவேண்டிய தார்மீக கடமைகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை சொகுசு ஹோட்டலில் பா.ஜ.க தலைவர் வெங்கய்யா நாயுடு குறித்த ஆவணப்புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். சென்னை வந்த பா.ஜ.க தலைவர் அமித்ஷாவை சென்று சந்திக்கிறார்.

கஜா புயல், டெல்டா மாவட்டங்களைப் புரட்டியெடுத்த போதே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல நாட்கள் கழித்துப் பார்வையிட்டார். அதுவும் ஹெலிகாப்டரில் பறந்தபடி சேதங்களைப் பார்வையிட்டது மக்களைக் கொதித்தெழச் செய்தது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினோ உடனடியாக களத்தில் இறங்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ததோடு, மக்களைச் சந்தித்து நம்பிக்கை அளித்தார்.

அதேபோலவே, இந்த நீலகிரி பேரிடரின்போதும், அம்மாவட்ட மக்களைப் பற்றிய துளி அக்கறையுமின்றி, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடாமல், தனது ஆட்சி அதிகாரமும், அதன் மூலம் தனக்குக் கிடைக்கும் வெகுமதிகளுமே கதியென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

ரோம் நகரம் பற்றி எரிந்தபோது, மன்னனாக இருந்த நீரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் பிடில் வாசித்துக்கொண்டிருந்ததாக வரலாறுகள் உண்டு. ஆனால், இன்று தமிழகமே மூழ்கிக்கொண்டிருக்கும் நிலையில், கண்ணீராலும் தண்ணீராலும் நீலகிரி மக்கள் கவலையில் இருக்கும் சூழலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் எடப்பாடிக்கு நிச்சயம் காலம் பதில் சொல்லும்.