Tamilnadu
தவறி விழுந்ததாக நாடகம்... பெற்ற குழந்தையை தாயே அடித்துக்கொன்ற கொடூரம் : நெல்லையில் அதிர்ச்சி!
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வசிப்பவர் ராஜ். இவர் மின்வாரியத்தில் கணக்கீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வடகாசி. இவர்களுக்கு தானேஷ் பிரபாகரன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த சாமிநாதன் எனும் பால் வியாபாரி ராஜின் வீட்டுக்கு பால் ஊற்றுவது வழக்கம். வடகாசிக்கும், சாமிநாதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தவறான உறவாக மாறியுள்ளது.
இதையறிந்த ராஜ் தன்னுடைய மனைவி வடகாசியையும், சாமிநாதனையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தங்களது தவறான உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர்.
இதனால், ராஜ், தனது குழந்தையை சங்கரன்கோவிலில் உள்ள மாமனார் வீட்டில் விட்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் “குழந்தையைப் பார்க்கவேண்டும்; உனது அப்பா வீட்டுக்குச் சென்று அழைத்து வா” என மனைவியிடம் கூறியுள்ளார் ராஜ்.
இதையடுத்து, வடகாசி, சங்கரன்கோவில் சென்று குழந்தை தானேஷ் பிரபாகரனை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்குச் செல்லாமல் சாமிநாதனுடன் சென்றுள்ளார். நேற்றிரவு ராஜ் தனது வீட்டுக்கு சென்றபோது, அங்கு மனைவி குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, தனது மாமனாருக்கு போன் செய்து கேட்டுள்ளார். வடகாசி, குழந்தையுடன் மாலையிலேயே புறப்பட்டுச் சென்றதாக கூறினார்.
இதையடுத்து, சந்தேகமடைந்த ராஜ் சாமிநாதனின் ஊருக்குச் சென்று தேடியுள்ளார். அப்போது, ஒரு வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்கவே, அங்கு சென்று பார்த்துள்ளார். அங்கு, வடகாசியும் சாமிநாதனும் இருந்துள்ளனர். ராஜைப் பார்த்ததும் இருவரும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தப்பித்துள்ளனர்.
வடகாசி, குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாகக் கூறி சங்கரன்கோவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து ராஜ் அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்களின் மகிழ்ச்சிக்கு இடையூறாக இருந்த குழந்தையை வடகாசியே, சாமிநாதனுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்தது தெரியவந்துள்ளது. தாயே, குழந்தையைக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!