Tamilnadu

வேலூர் மக்களவை தொகுதி வாக்குப்பதிவு தொடங்கியது : வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு!

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் 11ம் தேதி தொடங்கி கடந்த 18ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், அ.தி.மு.க சார்பில் புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகின்றனர்.

வேலூர் மக்களவை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து ஆயிரத்து 351 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேரும், முன்றாம் பாலினத்தவர்கள் 105 பேர் என மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,553 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,919 கட்டுப்பாட்டுக் கருவி, 3,853 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2 ஆயிரத்து 99 வி.வி.பேட் இயந்திரங்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

வாக்குப்பதிவையொட்டி 3 ஆயிரத்து 957 போலீசார் மற்றும் 1,600 துணை ராணுவத்தினர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மொத்தமுள்ள 1,553 வாக்குச்சாவடி மையங்களில் 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளும் சி.சி.டி.வி மூலம் கண்காணிக்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய காலை முதல் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள். வாக்குபதிவு நடைபெறுவதால் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.