Tamilnadu
240 கிலோ மீட்டர்... 3 மணிநேரம்... திக்திக் ஆம்புலன்ஸ் பயணம் - குழந்தையின் உயிரைக் காக்க உதவிய வாட்சாப்!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் சாமி மற்றும் ஆர்த்தி தம்பதிக்குக் இரண்டு மாதம் முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் ஆர்த்தி தனது சொந்த ஊரான தேனிக்குச் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த ஆர்த்தியின் குடும்பத்தினர், அருகில் உள்ள தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், “குழந்தைக்கு மூச்சுக்குழாயில் அடைப்பு உள்ளதால் வலிப்பு ஏற்பட்ட்டிருக்கிறது. பச்சிளம் குழந்தை என்பதால் இங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாது. உடனே உயர் சிகிச்சைக்காகக் கோவைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.
கோவைக்கு கொண்டு செல்லும் நேரம் வரை, குழந்தைக்கு சுவாச பிரச்னையை கட்டுக்குள் வைக்க, இன்குபேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் தேவைப்பட்டது. தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் சதீஷ்குமார் உதவிக்கு வந்தார். அவரது முயற்சியில், கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து இன்குபேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் தேனி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.
தேனியிலிருந்து கோவைக்கு குழந்தையைக் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
குழந்தையை கோவைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாபர் அலி மற்றும் அவருடன் மருத்துவ உதவிக்காகப் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அஸ்வின்சந்த் என்ற மருத்துவ உதவியாளரும் உடன் சென்றனர்.
உயிருக்கு போராடும் குழந்தையை காப்பாற்ற, ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்பதால், தேனியில் இருந்து கோவைக்குச் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பது அவசியம். எனவே தேனி, திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு வாட்சாப் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. ‘தமிழ்நாடு ஆம்புலன்ஸ்’ என்ற வாட்ஸ்அப் குழுவிலும் உதவிகள் கேட்கப்பட்டது.
உடனடியாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், குழந்தை இருக்கும் ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதபடி, முயற்சிகளை மேற்கொண்டனர். ஒலிபெருக்கி மூலம் வாகனங்களை வழிவிட வலியுறுத்தி முன் சென்றனர். ஆம்புலன்ஸ் வாட்சாப் குழுவில் இருந்து, சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் குழுவுக்கும் தகவல் பகிரப்பட்டது. அந்த தகவலை அறிந்த தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநர்களும் களத்தில் இறங்கி உதவினர்.
அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர்கள் குழந்தையை அழைத்துவரும் வழியில் ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்காமல் செல்வதற்காக, அவர்கள் வாகனங்களுடன் ஆங்காங்கே நின்று, சாலை இடையில் வாகனங்கள் செல்லாமலும், கூட்ட நெரிசல் ஏற்படாமலும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்கள்.
ஆம்புலன்ஸ் மற்றும் சுற்றுலா ஓட்டுநர்களின் இந்த முயற்சி பற்றி தகவல் அறிந்து, நெடுஞ்சாலை ரோந்து காவலர்களும், உதவிக்கு களம் இறங்கினர். ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் ‘சைரன்’ ஒலி எழுப்பியும், ஒலிப்பெருக்கியில் வாகனங்களை ஒழுங்குப்படுத்தியும் ஆம்புலன்ஸ்க்கு வழி செய்து கொடுத்தனர்.
இவர்கள் அத்தனை பேரின் முயற்சியால், பிற்பகல் 3.15 மணிக்கு தேனியிலிருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ் மாலை 6.10 மணிக்கெல்லாம் கோவை தனியார் மருத்துவமனையை சென்றடைந்தது. சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 2 மணி 55 நிமிடத்திற்குள் கடந்து சென்றுள்ளனர். பொதுவாக இந்த தூரத்தை கடக்க 5 மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அபார முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது தான் மகிழ்ச்சியான செய்தி. உடனடி சிகிச்சை பெற்ற குழந்தை இப்போது நலம். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தற்போது பொது வார்டுக்கு குழந்தை மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பெற்றோர்கள் ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுநருக்கும், உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்தனர்.
குழந்தையைக் காப்பாற்ற ஒருங்கிணைந்த எடுக்கப்பட்ட இந்த அபார முயற்சியை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!