Tamilnadu
தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் : நடுக்கடலில் கைது செய்த கடலோர காவல்படை!
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடந்த 11ந் தேதி கருங்கல் ஏற்றிக் கொண்டு மங்கோலியா நாட்டில் பதிவு செய்யப்பட்ட, மாலத்தீவை சேர்ந்த முராய்ப் என்பவருக்கு சொந்தமான விர்கோ 9 என்ற இழுவை கப்பல் புறப்பட்டுச் சென்றது. இந்த இழுவை கப்பல் மாலி துறைமுகத்துக்கு சென்று சரக்கை இறக்கியது.
கடந்த 27ந் தேதி அங்கிருந்து மீண்டும் 9 மாலுமிகளுடன் தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்தது. இந்த கப்பல் சிறிது தூரம் வந்த போது, வேறு ஒரு மர்ம ஆசாமி இந்தக் கப்பலில் ஏறி உள்ளார். இதற்கு கப்பலில் இருந்த இந்தோனேஷிய ஊழியர்கள் உதவியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த கப்பலில் இருந்த தமிழகத்தை சேர்ந்த போஸ்கோ நிக்கோலஸ் புதிதாக ஒரு நபர் இழுவை கப்பலில் ஏறி இருப்பதால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதினார். இதனால் அவர் இழுவை கப்பலின் உரிமையாளரான முராய்ப்க்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக முராய்ப், தனது கப்பலுக்கு சரக்கு ஏற்றி அனுப்பும், தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக மர்ம ஆசாமி கப்பலில் ஏறி இருப்பதால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் கப்பலை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தினர் தூத்துக்குடி கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில் கப்பலில் புதியதாக ஏறிய நபர், மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் என்பது தெரியவந்தது. இதனால் உஷாரான உளவுப்பிரிவு அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அகமது ஆதீப் எப்படி கப்பலில் ஏறினார்? என்பது குறித்தும் அவருக்கு உதவிய நபர்களிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தூத்துக்குடிக்கு வந்த கப்பல் மூலம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற அகமது ஆதீப் கடந்த 2015ம் ஆண்டு மாலத்தீவு துணை அதிபராக இருந்தார். அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் என்பவரை படகில் வெடிகுண்டு வைத்து கொலை முயற்சி நடந்தது. இதில் அப்துல்லா யாமீன் எந்தவித காயமும் இன்றி தப்பினார். அதே நேரத்தில் படகில் இருந்த அவருடைய மனைவி, மகள் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இந்த வழக்கில் துணை அதிபராக இருந்த அகமது ஆதீப் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அகமது ஆதீப்புக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் அரசியல் ரீதியாக அந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் கருத்து எழுந்தது.
இதனால் கடந்த மே மாதம் இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அகமது ஆதீப் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் தூத்துக்குடிக்கு வந்த இழுவை கப்பலில் பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளவுப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!