Tamilnadu

ஒருவர் கூட சேராத 35 கல்லூரிகள்; நிரம்பாத 1 லட்சம் இடங்கள்- பொறியியலை புறக்கணிக்கும் தமிழக மாணவர்கள்!

பொறியியல் கல்வி மீதான ஆர்வம் தமிழக மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. மேம்படுத்தப்படாத பாடத் திட்டம், தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதிகள் அற்ற பொறியியல் கல்லூரிகள், வேலை வாய்ப்பின்மை ஆகிய காரணங்கள் அப்பட்டமாக தெரிவதால், மாணவர்கள் பொறியியல் படிப்புகளைக் காட்டிலும் கட்டணம் குறைவான கலை மற்றும் அறிவியல் படிப்புகளை தேர்வு செய்கின்றனர்.

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நான்கு சுற்றுகளாக, கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கலந்தாய்வின் முதல் இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில் 87 சதவீத இடங்கள் தற்போது வரை நிரம்பாமல் காலியாக உள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. அதாவது 1 லட்சத்து 66 ஆயிரத்து 582 இடங்களில் வெறும் 21 ஆயிரத்து 532 இடங்களை மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், மூன்றாவது சுற்று கலந்தாய்வின் முடிவில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி, சேலம் கைத்தறி தொழில்நுட்ப கல்லூரி, சிக்ரி ஆகிய 3 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. வெறும் 8 கல்லூரிகளில் மட்டுமே 99 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன.

அதுமட்டுமின்றி 115 பொறியியல் கல்லூரிகளில் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. 80 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

இதைவிட மோசமான நிலையில், 35 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை. மேலும், நான்காம் சுற்று கலந்தாய்வுக்கு சுமார் 37 ஆயிரத்து 598 மாணவர்கள் அழைக்கப்படுள்ளனர் என பொறியியல் சேர்க்கை (TNEA) குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஈ.பாலகுருசாமி கூறுகையில்,”40% சேர்க்கை இல்லாமல் பொறியியல் கல்லூரிகளை இயக்குவது கடினம். கடந்த மூன்று ஆண்டுகளாகவே பொறியியல் சேர்க்கை மோசமாக உள்ளது. ஆனால் இந்த நிலைமையை மாற்றியமைக்க அரசு முயற்சி எடுத்திருக்க வேண்டும். இதற்கு மேல் ஒரு லட்சம் காலி இடங்களை நிரப்பமுடியாது.” என அவர் தெரிவித்துள்ளார்.