Tamilnadu
“டெல்லியில் முடியும்போது, தமிழகத்தில் முடியாதா? : தமிழக போலீசாருக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி?
கட்டாய ஹெல்மெட் விதியை அமல்படுத்தக் கோரிய வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் சுப்பிரமணியம் பிரசாத், மற்றும் மணிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி மணிக்குமார், “நான் டெல்லியில் பணியாற்றியபோது, அங்கு போக்குவரத்து போலீசாரின் செயல்பாடு சிறப்பாக இருக்கும், சக போலீசாரால் அங்கு செய்ய முடிந்ததை சென்னையில் இவர்களால் ஏன் செய்யமுடியவில்லை என வேதனைப்பட்டேன். குறிப்பாக டெல்லியில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து செல்லும் ஒரு சிறுகுழந்தை கூட ஹெல்மெட் இல்லாமல் செல்வதைப் பார்க்கமுடியாது. டெல்லியில் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் சாத்தியமாகவில்லை?” என அவர் கேள்வி எழுப்பினார்.
பின்னர், இந்த விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, வாதாடும்போது, கட்டாய ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்த அரசு முயற்சிகள் எடுத்துவருவதாக விளக்கம் அளித்தார். அந்த விவாதத்தின்போது சில முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான ஒரு நிமிட வீடியோ பதிவு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை பார்வையிட்ட நீதிபதிகள், போக்குவரத்து சிக்னல்களில் 300-க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணியாமல் தான் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரையும் போலீசார் தடுக்கவில்லை. மாறாக சிலைபோல நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் என குற்றம் சாட்டினார். மேலும் அந்த கண்ணாணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் யார் என்பன உள்ளிட்ட பட்டியலை அரசு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.
இதனையடுத்து இதற்கு பதில் அளித்த கூடுதல் தலைமை வழக்கறிகஞர் கூறுகையில், கட்டாய ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுப்பதாகவும், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு உணர்த்திவருவதாக அவர் வாதிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், விதிகளை முழுமையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் மீது நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கும் நிலை உருவாகும் என எச்சரித்தனர். பின்னர் ஜூலை 26ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!