Tamilnadu
2 மாணவர்கள் டிஸ்மிஸ் “எங்க கல்லூரி பேரை கெடுக்கவே இப்படி பண்றாங்க” -பச்சையப்பன் கல்லூரி முதல்வர் விளக்கம்
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதல் போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. சில நேரங்களில் ரயில் நிலையங்களிலும், பேருந்துகளிலும் மக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர். இந்த மாணவர்களின் மோதலில் பச்சயப்பன் கல்லூரியின் பெயர் தான் அதிகமாக அடிபடுகிறது.
நேற்றைய தினம் சென்னை பூந்தமல்லி சாலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் கையில் பெரிய பட்டாக்கத்திகளை வைத்துக் கொண்டு, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களை வெட்டியுள்ளனர். ‘ரூட்டு தல’ யார் என்பதில் எழுந்த பிரச்னையால் இந்த மோதல் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 7 மாணவர்களுக்கு வெட்டுக் காயம் ஏற்படுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழிசெல்வன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது அவர் பேசியதாவது, “மாணவர்கள் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்களது குடும்பச் சூழலே காரணம். நேற்றைய தினம் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மற்ற மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இதுபோலக் குற்றச் செயல்களைத் தடுக்க உயர்மட்ட ஆசிரியர் குழு ஒன்றை நியமித்துள்ளோம். அந்தக் குழு ஆய்வு செய்து கொடுக்கும் அறிக்கையைக் கொண்டு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமின்றி கல்லூரி வளாகத்திற்குள் கட்டுக்கோப்பான சூழல் தான் நிலவிவருகிறது. ஆசிரியர்கள் மாணவர்களை கல்லூரி வளாகத்தில் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கான குழுவையும் நியமித்துள்ளோம்.
கல்லூரி வளாகத்தில் எவ்வித அசம்பவித சம்பவமும் நடைபெறவில்லை. மேலும் பச்சையப்பன் கல்லுரி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும்”. எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவர் அமைப்பினர் கூறுகையில், “இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை உருவாகியுள்ளது. அதனால் மாணவர்களை, பொதுமக்கள் அச்ச உணர்வோடு பார்க்கிறார்கள். இது வேதனையளிப்பதாக உள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற தவறான சம்பவங்கள் நடக்கவிருக்கும்போதே அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
மேலும், தற்போது கல்லூரிகள் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், கலை, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் - மாணவர்களுடான இணக்கத்தை உண்டாக்க ஆசிரியர்கள் மாணவர்களை ஒன்றிணைத்த குழு ஒன்றை உருவாக்கவேண்டும். கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் நேரத்தில் கூடுதல் பேருந்து, ரயில்கள் இயக்கப்படவேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டுமே மாணவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுவடுவதைத் தடுக்க முடியும்”. என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!