Tamilnadu
மழைநீர் வடிந்துவிட்டதை ஆய்வு செய்ய அதிகாரிகள் எங்களுடன் வரத்தயாரா? - அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!
சென்னை மாநகராட்சியில் ஆயிரத்து 101 கோடியே 43 லட்சம் ரூபாய் உலக வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மழை நீர் பூமியில் இறங்குவதற்கு ஏதுவாக, மழைநீர் வடிகால்களின் அடிப்பகுதியில் காங்கிரீட் போட வேண்டாம் என உத்தரவிடக் கோரி சண்முகம் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் அண்ணாநகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அனைத்து வகையான கழிவுநீரும் கூவம் ஆற்றில் கலக்கப்படுவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக அரசிடம் மழை நீரை சேமித்து வைக்க எந்த ஒரு திட்டமும் இல்லை என்ற நீதிபதிகள் சென்னையில் எத்தனை நீர் நிலைகள் உள்ளன; அவற்றுள் சில ஏன் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளன எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசு தரப்பில், சென்னையில் கோயில்களில் உள்ள குளங்களை சேர்த்து 210 நீர்நிலைகள் இருப்பதாகவும், அதில் மக்கள் பயன்பாட்டுக்காக சிலவற்றின் சுற்றுப்புறம் மட்டும் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நேற்று பெய்த மழை நீர் முற்றிலும் வடிந்து விட்டதா, அதை நேரில் சென்று ஆய்வு செய்ய என்னுடன் காரில் மாநகராட்சி அதிகாரிகளால் வர முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு திட்டங்களுக்காக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் வகுக்கும் செலவின மதிப்பீட்டில் பல குளறுபடிகள் இருப்பதாகவும் சாடினர்.
மேலும், மழைநீர் வடிகால்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆணையரை ஏன் நியமிக்கக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மழை நீர் வடிகாலுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து கூடுதல் விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 29ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!