Tamilnadu

கொட்டும் மழையில் மாணவர்களை ஆடவிட்ட ஆசிரியர்கள் : அமைச்சரை வரவேற்பதற்காக நிகழ்ந்த கொடுமை!

புதுக்கோட்டை மாவட்டம் கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வருகை தந்தார். அப்போது, அவரை வரவேற்பதற்காக கொட்டும் மழையில் மாணவ- மாணவிகளை நடனம் ஆடச் செய்த அவலம் நடந்தேறியுள்ளது.

ஆளும் அ.தி.மு.க அரசு கல்வித்துறையைச் சீரழித்து வருவது கண்கூடு. மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை அமல்படுத்தத் துடிக்கும் பா.ஜ.க அரசுக்கு துணைபோகும் விதமாக நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் விளையாடி வருகிறது அ.தி.மு.க அரசு.

பள்ளிப் பாடத்திட்டங்களில் வரலாற்றை மறைத்து முரண்பட்ட தகவல்களை இடம்பெறச்செய்து பா.ஜ.க-வுக்கு துணைபுரிகிறது அ.தி.மு.க அரசு. போதாக்குறைக்கு, பள்ளிகள் துவங்கி மாதக்கணக்காகியும், பல அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்களைக் கூட இன்னும் வழங்காத அவலநிலை நிலவுகிறது.

இந்த நிலையில், பள்ளியைப் பார்வையிடும் அமைச்சருக்கு மன்னரை வரவேற்பதைப் போல ஆசிரியர்களும், அதிகாரிகளும் சேவகம் செய்யவேண்டிய அவசியம் என்ன என்பதுதான் கேள்வி. ஆசிரியர்கள், அமைச்சரிடம் நற்பெயர் பெறுவதற்காக மாணவர்களை கொட்டும் மழையில் நடனம் ஆடவைத்து வதைப்பது எவ்வகையில் நியாயம்?

மழையில் நனைந்துகொண்டு மாணவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், மாணவர் ஒருவர் வீடியோகிராஃபருக்கு குடைபிடித்துக் கொண்டிருக்கிறார். மாணவர்கள் தரம்தாழ்த்தி நடத்தப்படும் இந்த நிகழ்வுகள் அத்தனையும் மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் அதிகாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள் முன்னிலையிலேயே எவ்வித ஒளிவு மறைவுமின்றி நிகழ்ந்துள்ளது.

அமைச்சர்களும், அதிகாரிகளும் மழையில் நனையாமல் அமர்ந்துகொண்டு, மாணவர்களை மழையில் நனைந்தபடி ஆடவிட்ட கொடுமையை பெற்றோரும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்துள்ளனர்.