Tamilnadu
“புள்ளி விவரம் இதோ... இப்போ என்ன சொல்லப்போறீங்க அமைச்சரே..?” : சூர்யா கருத்துக்கு வலுக்கும் ஆதரவு!
புதிய கல்விக் கொள்கை குறித்தும் அதிலுள்ள சில பாதகமான அம்சங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்று கூறிய சூர்யா, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயலும் மத்திய - மாநில அரசுகளைக் மறைமுகமாக தாக்கினார்.
சூர்யாவின் இந்தப் பேச்சுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா ஆகியோரும், அ.தி.மு.க அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘சூர்யா ஒரு அரைவேக்காடு. அவருக்கு புதிய கல்விக் கொள்கை பற்றி என்ன தெரியும்? அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ’ எனக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
“குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்திருப்பது சரியல்ல. அந்தப் பள்ளிகளை தரம் உயர்த்தாமல், மூடினால் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள்? அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைத்தேர்வு, தகுதித் தேர்வு நடத்துவதன் மூலம் தகுதியானவர்களை உருவாக்க முடியுமா?” என தர்க்கப்பூர்வமான கேள்விகளை முன்வைத்திருந்தார் நடிகர் சூர்யா.
இந்நிலையில், கல்வித்துறை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள புள்ளி விவர ஆவணம் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 4,15,558 குறைந்துள்ளது. நடிகர் சூர்யாவும் இந்த அபாயம் குறித்தே பேசியிருந்தார்.
சூர்யா பேசியதை எதிர்த்த அ.தி.மு.க அமைச்சர்களும், பா.ஜ.க தலைவர்களும் கல்வித்துறை தாக்கல் செய்த இந்த புள்ளி விவர ஆவணத்திற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவாகவும், அவரைத் தாக்குபவர்களின் கருத்துகளுக்கு எதிராகவும், சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. சூர்யா கூறிய கருத்துகளை எடுத்துரைத்து புதிய கல்விக் கொள்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சூர்யாவுக்கு ஆதரவாக #StandWithSuriya #SuriyaFCWarnsBJPnADMK உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!